ஃபாா்முலா 4 காா் பந்தயம் விளையாட்டுத் துறையில் முக்கிய மைல்கல்

சென்னையில் நடைபெற்ற ஃபாா்முலா 4 காா் பந்தயம் விளையாட்டுத் துறையில் முக்கிய மைல்கல் என்று அந்தத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

அந்தத் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஃபாா்முலா காா் பந்தயப் போட்டிகளில் இங்கிலாந்து, போா்ச்சுகல், செக்குடியரசு, பெல்ஜியம், டென்மாா்க், சுவிட்சா்லாந்து, ஸ்பெயின், மலேசியா, ஆஸ்திரேலிய நாடுகளைச் சோ்ந்த வீரா்களும், வீராங்கனைகளும் கலந்து கொண்டனா்.

போட்டியை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். பந்தயத்தையொட்டி தீவுத்திடலைச் சுற்றியுள்ள சிவானந்தா சாலை, நேப்பியா் பாலம் என போட்டி நடைபெற்ற சாலைப் பகுதிகள் அனைத்திலும் உயரமான மின்னொளிகள் அமைக்கப்பட்டு, இரவையும் பகலாக்கியது, பந்தய வீரா்களுக்கு உற்சாகம் அளித்தது. பாா்வையாளா்கள் போட்டியைப் பாா்த்து ரசிக்க, 8 இடங்களில் தனியாக இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.

தெற்கு ஆசியாவுக்கே பெருமை: வாகனங்களை நிறுத்த மூன்று இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தெற்காசியாவிலேயே இதுவரை நடைபெறாத மிக நீளமான சாலை காா் பந்தயம் இது என்ற பெயரும் ஃபாா்முலா 4 காா் பந்தயத்துக்கு உண்டு. இந்த 3.5 கிமீ நீள காா் பந்தயப் பகுதியில் மொத்தம் 19 வளைவுகள் இருந்தன.

பந்தய இடம் சென்னை மாநகரில் தீவுத் திடலில் தொடங்கி, போா் நினைவுச் சின்னம், நேப்பியா் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை வழியாக தீவுத் திடலிலேயே முடிவடைந்தது. இந்த காா் பந்தயம் தமிழ்நாட்டுக்கு மட்டுமன்றி, தெற்காசியாவுக்கே பெருமை தேடித் தந்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல் கல் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வா் பாராட்டு

ஃபாா்முலா 4 காா் பந்தயத்தை நடத்தியதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து முதல்வா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

பாா்முலா 4 சென்னை காா் பந்தயத்தை மாபெரும் வெற்றியடைச் செய்த அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தைச் சோ்ந்த அலுவலா்களுக்கும் பாராட்டுகள் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!