அக்சர், குல்தீப் மிரட்டல் பந்துவீச்சு… இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.

கயானா,

டி20 உலகக்கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் களமிறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி 9 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். சிறிது நேரத்தில் ரிஷப் பண்ட்டும் (4) தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இக்கட்டான நிலையில் ரோகித்துடன் சூர்யகுமார் யாதவ் கைகோர்த்தார். இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நடுவே மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. ஒரு மணி நேர தாமதத்துக்கு பிறகு மீண்டும் போட்டி தொடங்கியது.

சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா, அரைசதம் அடித்த நிலையில், 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், சிக்ஸ் அடிக்க முயன்று எல்லைக்கோடு அருகே கேட்ச்சாகி ஆட்டமிழந்தார். ஹர்திக் 23 ரன்கள் எடுத்தார். சிவம் துபே டக் அவுட்டானார். அக்சர் படேல் 10 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 17 ரன்களுடனும், அர்ஸ்தீப் சிங் ஒரு ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோர்டான் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக ஜாஸ் பட்லர் – பில் சால்ட் களமிறங்கினர். ஜாஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சிறிது நேரத்தில் சால்ட்டும்(5) அவுட்டானார். அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். குறிப்பாக இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக பந்து வீசினர்.

இதன் காரணமாக மொயீன் அலி(8), பேர்ஸ்டோவ்(0), சாம் கரன்(2) ஹாரி புரூக்(25) அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். லிவிங்ஸ்டன் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 16.4 ஓவர்களில் 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ், அக்சர் படேல் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருது அக்சர் படேலுக்கு வழங்கப்பட்டது.

நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.

Related posts

இந்தியா-நியூசிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

புரோ கபடி லீக்: பாட்னா பைரேட்ஸ், யு மும்பா அணிகள் வெற்றி

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் வரலாறு படைத்த நியூசிலாந்து