அஜ்மீரில் இருதரப்பு மோதல்; ஒருவர் சுட்டுக்கொலை: ஜேசிபி வாகனத்துக்கு தீ வைப்பு!

ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தின் ரூபன்கர் நகரில் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின் போது நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியான நிலையில், ஒருவர் காயமடைந்தார்.

இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபக் குமார் கூறுகையில், “கடை கட்டுவது தொடர்பாக இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தடி, கம்பிகளால் தாக்கிக் கொண்டதாகவும், ஒரு தரப்பினர் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், அதில் ஒரு இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்” என்றார்.

இருதரப்பு மோதலின் போது சில வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும், ஜேசிபி இயந்திரம் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அப்பகுதியில் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ராஜஸ்தான் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வன்முறைக்கான விடியோ ஒன்றையும் பகிர்ந்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தப் பதிவில், “ராஜஸ்தானின் ரூபன்கரில் வன்முறையால் ஏற்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுக்கு உதாரணமாகவும் இருக்கிறது. சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதால், ராஜஸ்தான் மிகவும் பாதுகாப்பற்ற மாநிலமாகவும் மாறியுள்ளது. ஆளும் பாஜக அரசு வன்முறையைக் கண்டுகொள்ளாமல் உறங்கிக்கொண்டிருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!