அணியை முன்னெடுத்து செல்வதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன் – கம்பீர் பேட்டி

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் மும்பையில் நிருபர்களை சந்தித்தார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 20 ஓவர் போட்டி வருகிற 27, 28, 30-ந் தேதிகளில் பல்லகெலேவிலும், ஒருநாள் போட்டி ஆகஸ்டு 2, 4, 7-ம் தேதிகளில் கொழும்பிலும் நடக்கிறது.

இந்த தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி மும்பையில் இருந்து விமானம் மூலம் நேற்று பிற்பகல் இலங்கைக்கு புறப்பட்டு சென்றது. முன்னதாக இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் மும்பையில் நிருபர்களை சந்தித்தார். அதில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக பேட்டியளித்த கம்பீர் கூறுகையில்,

"எல்லா வீரர்களுக்கும் நான் எப்போதும் ஆதரவாக இருப்பேன். அவர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பேன். அவர்களுடன் நட்புறவு மூலம் நம்பிக்கையை வளர்ப்பேன். வீரர்களின் ஓய்வறையில் மகிழ்ச்சியான சூழல் இருந்தால், அது வெற்றிகரமான ஓய்வறையாக மாறும். இதில் எப்போதும் எனக்கு நம்பிக்கை உண்டு.

20 ஓவர் உலகக் கோப்பை சாம்பியன், டெஸ்ட் சாம்பியன்ஷிப், 50 ஓவர் உலகக் கோப்பையில் 2-வது இடம் என்று நமது அணி வெற்றிகரமாக விளங்குகிறது. அப்படிப்பட்ட ஒரு அணியை வழிநடத்தும் பெரிய பொறுப்பை ஏற்கிறேன். அணியை முன்னெடுத்து செல்வதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்.

இலங்கை தொடரை அடுத்து நாங்கள் தொடர்ச்சியாக 10 டெஸ்டுகளில் விளையாட இருக்கிறோம். இது சவாலான பயணம் என்றாலும் நன்றாக செயல்படுவோம் என்று நம்புகிறேன்" என கூறினார்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா