அதை செய்வதற்கு இந்தியாவை தவிர வேறு எந்த சிறந்த எதிரணியும் இருக்க முடியாது – ஆஸி.கேப்டன்

டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேற இந்தியாவுக்கு எதிராக கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் ஆஸ்திரேலியா உள்ளது.

கிங்ஸ்டவுன்,

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தானுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் வெறும் 149 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் ஜாட்ரான் 51, ரஹ்மனுல்லா குர்பாஸ் 60 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா ஆரம்பம் முதலே ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் திணறியது. அந்த வகையில் 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 127 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை பதிவு செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக குல்பாடின் நைப் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனால் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆஸ்திரேலியா தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் தோல்வியை சந்தித்ததை ஒப்புக் கொள்வதாக ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சேல் மார்ஷ் தெரிவித்துள்ளார். அதே சமயம் தங்களுடைய தரத்திற்கு அடுத்த போட்டியில் வென்று அரையிறுதி செல்வதற்கு இந்தியாவை விட ஒரு நல்ல அணி கிடைக்காது என்றும் அவர் மறைமுகமாக எச்சரித்தார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஆப்கானிஸ்தான் 20 ரன்கள் அதிகமாக எடுத்தனர். இந்த தொடரில் நிறைய அணிகள் முதலில் பந்து வீசினார்கள். எனவே டாஸ் முடிந்ததும் வெற்றி – தோல்வி நிர்ணயிக்கப்பட்டதாக நான் கருதவில்லை. இன்றைய இரவு எங்களுக்கு சரியாக அமையவில்லை. பிட்ச் விளையாடுவதற்கு எளிதாக இல்லை. ஆனால் 2 அணிகளும் அதில் விளையாடின. ஏற்கனவே சொன்னதுபோல இந்தப் போட்டியில் நாங்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளோம். தற்போது நாங்கள் அடுத்த போட்டியில் வெல்ல வேண்டியுள்ளது. அதை செய்வதற்கு எங்களுக்கு இந்தியாவை தவிர வேறு எந்த சிறந்த எதிரணியும் இருக்க முடியாது" என்று கூறினார்.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி