அத்திக்கடவு – அவிநாசி திட்டம் தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் 24,468 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் ரூ.1,916.41 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ள அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

2021-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைந்த பிறகு, அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற உறுதிபூண்டு, ரூ.1,916.41கோடி மதிப்பீட்டில் திருத்தியநிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக திட்டப்பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை முதல்வர் நேற்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்தில் இருந்து ஆண்டுக்கு 1.50 டிஎம்சி உபரி நீரை வினாடிக்கு 250 கனஅடி வீதம் 70 நாட்களுக்கு நீரேற்று முறையில், 1,065 கிமீ நீளத்துக்கு கொண்டுசெல்ல முடியும். நிலத்தடியில் குழாய் பதிந்து கொண்டு செல்லப்படும் இந்த தண்ணீர், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 24,468 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில், நீர்வளத்துறையின் 32 ஏரிகள், ஊராட்சி ஒன்றியத்தின் 42 ஏரிகள் மற்றும் 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1,045 நீர்நிலைகளில் நிரப்பப்படும்.

திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, நீர்வளத்துறையின் செயலாளர் க.மணிவாசன், நீர்வளத்துறையின் முதன்மை தலைமைப் பொறியாளர் சா.மன்மதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஈரோட்டில் இருந்து காணொலி மூலமாக அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், கே.இ.பிரகாஷ் எம்.பி.,எம்எல்ஏ.க்கள் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஏ.ஜி. வெங்கடாசலம், சி.சரஸ்வதி, ஈரோடு மேயர் எஸ்.நாகரத்தினம், ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, திருப்பூர் ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இத்திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவு: 1972-ல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி செயல்படுத்திட முனைந்த அத்திக்கடவு – அவிநாசி திட்டம், பல்வேறு ஆட்சி மாற்றங்களால் தடைபட்டிருந்தது.

இந்த திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள்கடந்த 2016-ம் ஆண்டு காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தபோது, அவர்களை நேரில் சந்தித்து, திமுக ஆட்சியில் இந்த திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தேன்.

இந்த திட்டத்துக்கான பணிகள் 2019-ல் தொடங்கப்பட்டிருந்தாலும், நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான், இத்திட்டத்தை நிறைவேற்றிட உறுதிபூண்டு, ரூ.1,916.41 கோடி மதிப்பீட்டில் திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.

ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் இந்த திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கோடியக்கரை அருகே கடலில் தவறி விழுந்த தரங்கம்பாடி மீனவர் மாயம்

“நீர்நிலைகளை தனியாருக்கு தாரைவார்ப்பதா?” – தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம் 

நடிகர் விஜய்யை அதிமுகவினர் யாரும் விமர்சிக்க வேண்டாம்: நிர்வாகிகளுக்கு பழனிசாமி அறிவுறுத்தியதாக தகவல்