அந்த சமயத்தில் ரவி சாஸ்திரி பாட்டு பாடி எங்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்தார் – அஸ்வின்

சோகத்தில் மூழ்கிய இந்திய அணியினருக்கு ரவி சாஸ்திரி பாட்டு பாடி புத்துணர்ச்சி கொடுத்ததாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.

ஏற்கனவே கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் காத்திருக்கிறது.

அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

முன்னதாக கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டியில் 36க்கு ஆல் அவுட்டான இந்தியா வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. ஆனால் அந்த சுற்றுபயணத்தில் இந்தியா 2 – 1 (4 போட்டிகள்) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவில் மீண்டும் வரலாற்று வெற்றியை பெற்றது.

இந்நிலையில் அந்த தொடரில் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணியினருக்கு அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாட்டு பாடி புத்துணர்ச்சி கொடுத்ததாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இதுவரை யாரும் அறிந்திராத பின்னணியை சமீபத்திய பேட்டியில் அவர் பகிர்ந்து பேசியது பின்வருமாறு:- "அந்த தோல்விக்குப்பின் நாங்கள் தொடரை வெல்வது பற்றி நினைக்கவே இல்லை. ஏனெனில் அணியின் மொத்த சூழ்நிலையும் தன்னம்பிக்கையும் சரிந்து போனது. ஆனால் அன்றைய நாள் மாலையில் ரவி பாய் இந்திய அணிக்காக பிரத்தியேக டின்னரை நடத்தினார். அந்த டின்னரில் அவர் பாட்டும் பாடினார்.

குறிப்பாக பிரபல பாடலின் வரிகள் இல்லாமல் கரோக்கே இசையை மட்டும் பின்பற்றி அவர் பாடத் தொடங்கினார். மெதுவாக மற்ற இந்திய வீரர்களும் அதைப் பின்பற்ற தொடங்கினர். அப்போது நேர்மறையாக இருந்து மெல்போர்னுக்கு சென்று வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களுடைய எண்ணமாகும். தொடரை வெல்வதைப் பற்றி நாங்கள் சிந்திக்கவே இல்லை. சிறிய இலக்குகளை மட்டும் வைத்துக் கொண்டு ஒவ்வொரு போட்டியையும் தனித்தனியாக எடுத்துக்கொண்டு விளையாடினோம்" என்று கூறினார்.

Related posts

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மகளிர் டி20 கிரிக்கெட்; 13 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

மகளிர் டி20 கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்காவுக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தான் அபார பந்துவீச்சு… தென் ஆப்பிரிக்கா 106 ரன்களில் ஆல் அவுட்