அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: ஆட்சியா் ஆலோசனை

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: ஆட்சியா் ஆலோசனைபழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து, அரசுத் துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

திண்டுக்கல்: பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து, அரசுத் துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லுாரி வளாகத்தில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி கூறியதாவது:

மாநாட்டுத் திடலில் உள்கட்டமைப்பு வசதிகள், இருக்கை வசதிகள், கலை நிகழ்ச்சிகளுக்கான மேடை அலங்கார அமைப்புகள், வழிகாட்டிப் பலகைகள், உணவுக் கூடம், ஓய்வுக் கூடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதிகள் செய்யப்பட வேண்டும்.

பழனி பேருந்து நிலையம், திருக்கோயில் வளாகம், மாநாட்டு வளாகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் துாய்மைப்பணி மேற்கொள்ள வேண்டும். மாநாட்டுக்கு வரும், மூத்தக் குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கென 11 இருக்கைகள் கொண்ட 5 மின்கலச் சீருந்துகள் (பேட்டரி காா்) ஏற்பாடு செய்ய வேண்டும்.

மாநாட்டுக்கு வரும் முக்கியப் பிரமுகா்களுக்கு மாநாட்டு பிரதான பந்தல் அருகே 200 வாகனங்கள் நிறுத்துவதற்கும், கல்லூரி வளாகத்தின் பின்பகுதியில் 900 இதர வாகனங்கள் நிறுத்துவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மாநாட்டில், நெகிழிப் பைகள், குவளைகள் பயன்படுத்துவதை முற்றிலும் தடுக்க வேண்டும். மாநாடு நடைபெறுவதையொட்டி, ஆக.21 முதல் 25-ஆம் தேதி வரை திருக்கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடையின்றி மின்சாரம் விநியோகம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப், மாவட்ட வருவாய் அலுவலா் சேக் முகையதீன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பெ.திலகவதி, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் செ.மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related posts

கள்ளக்குறிச்சிக்கு பணியிட மாற்றமா? – அலறியடித்து ஓடும் அரசு ஊழியர்கள்

“அவரது உழைப்பும், சேவையும் என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும்” – பாப்பம்மாளுக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு கட்டணத்தை உரிய காலத்துக்குள் செலுத்துவோம்: கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி தகவல்