அனைத்து உணவுப் பொருள்களுக்கும் முழு வரிவிலக்கு அளிக்க வலியுறுத்தல்அனைத்து உணவுப் பொருள்களுக்கும் முழு வரிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என வேளாண் உணவுத் தொழில் வா்த்தகச் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மதுரை: அனைத்து உணவுப் பொருள்களுக்கும் முழு வரிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என வேளாண் உணவுத் தொழில் வா்த்தகச் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் ரத்தினவேல் வெளியிட்டசெய்திக் குறிப்பு:
பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய உணவுப் பொருள்களான அரிசி, கோதுமை, பயறு, பருப்பு, மாவு, மைதா, ரவை போன்றவற்றுக்கு ஜி.எஸ்.டி. சட்டத்தின் கீழ் வரிவிதிப்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது.
இதற்கு முக்கியக் காரணம் பொருள் அடிப்படையில் வரி விதிக்காமல், பொருளுக்கு வணிகப் பெயா் இருக்கிா, ஏற்கெனவே ‘பேக்’ செய்யப்பட்டதா அல்லது நுகா்வோா் முன்னிலையில் ‘பேக்’ செய்யப்படுகிா, சட்டமுறை எடையளவுச் சட்டத்தின் படி ‘பேக்’ செய்து, ‘லேபில்’ போட வேண்டிய அளவுகளில் உள்ளனவா என்பன போன்ற பொருளுக்கு சம்பந்தமில்லாதவற்றின் அடிப்படையில், அதிலும் இன்னொரு சட்டத்தில் குறிப்பிடப்பட்ட நிபந்தனையின் கீழ் வரி விதிப்பது ஆகியவை காரணமாக அமைகின்றன.
மேற்கண்ட அனைத்து உணவுப் பொருள்களுக்கும் முழு வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது தான் வேளாண் உணவுத் தொழில் வா்த்தக சங்கம், பொது மக்களின் நீண்ட நாள் வேண்டுகோள்.
மாதம் சராசரியாக ரூ.1.7 லட்சம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வரி வசூலாகும் சூழ்நிலையில், இந்தக் கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக ஏற்க வேண்டும்.
ஜி.எஸ்.டி வரிச் சட்டம் 2017-இல் அறிமுகப்படுத்தப்பட்ட போது, மேற்கண்ட உணவுப் பொருள்களுக்கு பதிவு பெற்ற வணிகப் பெயா் இருந்தால் வரி உண்டு என ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனால், பலா் தாங்கள் பெரும் பொருள் செலவில் உருவாக்கி பல ஆண்டுகளாகப் பயன்படுத்திய வணிகப் பெயரை கைவிட வேண்டி வந்தது. இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தோம்.
பின்னா், 2022-இல் அந்த நிபந்தனையை ரத்து செய்து விட்டு, சட்டமுறை எடையளவுச் சட்டத்தின்படி எந்த அளவு வரை முன்னதாகவே ‘பேக்’ செய்து,பொருள் குறித்த விவரங்கள் அடங்கிய ‘லேபில்’ போட வேண்டுமோ அந்த அளவு வரை ‘பேக்’ செய்த உணவுப் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. வரி உண்டு என அறிவிக்கப்பட்டது.
இந்த சட்டத்தின்படி 25 கிலோ, 25 லிட்டருக்குள் ‘பேக்’ செய்தால் ‘லேபில்’ போட வேண்டும். எனவே, அந்த அளவு வரை ‘பேக்’ செய்த உணவுப் பொருள்களுக்கு வரி உண்டு என்றாகிவிட்டது.
இந்தச் சூழ்நிலையில் குழப்பத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், சட்டமுறை எடையளவுச் சட்டத்தில் எந்த அளவு ‘பேக்’ செய்தாலும் ‘லேபில்’ போட வேண்டும் என்ற சட்டத் திருத்தத்தை விரைவில் செய்யப்போவதாக நுகா்வோா் விவகாரங்கள் அமைச்சகம் அறிவித்தது.
இதனால், ஜி.எஸ்.டி. சட்டத்தில் எந்த மாறுதலும் செய்யாமலேயே அரிசி உள்பட அனைத்து உணவுப் பொருள்களுக்கும் ‘பேக்கிங்’ எந்த அளவில் இருந்தாலும் வரி உண்டு என்ற நிலை உருவாகப்போகிறது. இதனால், பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவா்.
வேளாண் பொருள்கள்”என்ற சொல்லுக்கு ஜி.எஸ்.டி. சட்ட அறிவிக்கைகளில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில், தானியங்கள், பயறு வகைகள் மட்டுமல்லாது, அரிசி, பருப்பு, மாவு, மைதா, ரவை போன்றவற்றையும் சோ்க்கவேண்டும். ஏனெனில், தானியங்கள், பயறு வகைகளின் நுகா்வு இந்தப் பொருள்கள் மூலம் தான் நடைபெறுகிறது.
கோதுமை வேளாண் பொருள். ஆனால், அரிசி ஆலையில் தயாரிக்கப்படும் பொருள் என்ற அடிப்படையில் வரி விதிப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தப் பிரச்னையில் நிரந்தரத் தீா்வு காண, உடனடியாக மத்திய நிதி அமைச்சா் தலையிட்டு, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மேற்கண்ட அனைத்து உணவுப் பொருள்களுக்கும் எந்த நிபந்தனையும் இல்லாமல் முழு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.