‘அமரன்’ படத்தை விமர்சித்த இயக்குநர் கோபி நயினார்

‘அமரன்’ திரைப்படம் சிறப்பாக இருந்தது, லட்சக்கணக்கான காஷ்மீர் மக்களின் கண்ணீரோடு என்று இயக்குநர் கோபி நயினார் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

சென்னை,

விஜய் நடித்த கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று கூறி போராடியவர் கோபி நயினார். அதன் பிறகு அறம் படம் மூலம் கவனம் ஈர்த்தார். முதல் படமே அட்டகாசமாக இருந்ததால் கோபி நயினார் நம்பிக்கைக்குரிய இயக்குநர் என்ற பெயரையும் பெற்றார். இப்போது அவர் நடிகை ஆண்ட்ரியாவை வைத்து மனுசி படத்தை இயக்கியிருக்கிறார். நடிகர் ஜெய்யை வைத்து கருப்பர் நகரம் என்ற படத்தை இயக்கவும் கமிட்டாகியிருக்கிறார்.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் பல தரப்பினரிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.தமிழக முதல்வர் ஸ்டாலின் துவங்கி நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, அரசியல்வாதிகள் சீமான், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை என பிரபலங்கள் பலரும் படத்தை பெரிதாகக் குறிப்பிட்டு வருகின்றனர். ரசிகர்களிடம் உணர்ச்சிகரமான வெற்றியையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் கோபி நயினார் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் கூறியதாவது: 'சமீபத்தில் நான் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த 'அமரன்' திரைப்படத்தை பார்த்தேன். அனைவரும் சிவகார்த்திகேயன், சாய் பல்லவியின் சிறப்பான நடிப்பை பாராட்டியும் அதனால் இது ஒரு சிறந்த திரைப்படம் என கருதுவதாகவும் எனக்கு புரிய வருகிறது. அதனால் இந்தப் படம் மிகப்பெரிய வசூலையும் ஈட்டி உள்ளது.

ஆனால், இந்தப் திரைப்படம் சொல்ல வரும் கருத்தைப் பற்றி யாரும் பேச மறுக்கிறார்களா இல்லை கவனிக்க மறந்து விட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.இப்படத்தின் திரைக்கதைக்குப் பின் இருக்கும் ஒரு சமூகத்தின் துயரத்தை யாரும் கவனிக்கவில்லை என்பது வேதனை அளிப்பதாக உள்ளது. ஒருவன் ஒரு குழந்தையை தனது துப்பாக்கியால் ஒரே குண்டில் கொல்கிறான். குழந்தை துடித்து இறக்கிறது. அதனைக் கண்ட தாய் துடிதுடிக்கிறாள். இதனைக் கண்ட அனைவரும் அவர் எவ்வளவு அருமையாக சுடுகிறார், அது குழந்தை என்பதால் இரண்டு மூன்று குண்டுகளால் துளைக்கப்பட்டு துடித்து சாகக்கூடாது என ஒரே குண்டால் அதன் இதயத்தை நோக்கி பிரமாதமாக சுட்டு ஒரே நொடியில் அருமையாக கொல்கிறார் என சிலாகித்து பேசுகின்றனர். ஆனால், அங்கு கத்தி கதறி அழும் அந்த தாயை யாரும் கவனிக்கவில்லை. எல்லோரும் அந்தக் குழந்தை எப்படி நேர்த்தியாக சுட்டுக் கொல்லப்பட்டது என்பதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அந்த குழந்தையின் மரணமும் அதன்பின் இருக்கும் வேதனையும் மறைக்கப்பட்டதே இந்தத் திரைப்படத்தின் கருத்தாக இருக்கிறது.நானும் சொல்கிறேன் அமரன் திரைப்படம் மிகச் சிறப்பாக இருந்தது லட்சக்கணக்கான காஷ்மீர் மக்களின் கண்ணீரோடு' என்றார்.

#Amaran#GopiNainarpic.twitter.com/wHbQrS14Ab

— Gopi Nainar (@GopiNainar) November 8, 2024

இயக்குநர் வசந்தபாலனும் 'காஷ்மீரின் அரசியலும் சூழலும் பேசப்படாமலேதான் இந்த படமும் கடந்து விட்டது வருத்தமே' என விமர்சித்திருந்தார்.

Related posts

சதம் விளாசிய சஞ்சு சாம்சன்; தென்னாப்பிரிக்காவுக்கு 203 ரன்கள் இலக்கு!

தமிழக தலைமைத் தேர்தல் அலுவலராக அர்ச்சனா பட்நாயக் நியமனம்!

இன்னும் பல வெற்றிகள் காத்திருக்கு… முகமது ரிஸ்வானை பாராட்டிய முன்னாள் கேப்டன்!