அமலாக்க துறை அலுவலகத்தில் கையெழுத்திட்ட செந்தில் பாலாஜி

அமலாக்க துறை அலுவலகத்தில் கையெழுத்திட்ட செந்தில் பாலாஜி

சென்னை: உச்ச நீதிமன்ற நிபந்தனைப்படி, சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆஜராகி கையெழுத்திட்டார்.

கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறிபணம் பெற்று மோசடி செய்ததாக பதிவான வழக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

இந்த மூல வழக்குகளின் அடிப்படையில் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும், கணக்கில் வராத ரூ.1.34 கோடி பணம், அவரது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி அவரை அமலாக்கத் துறையினர் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். பின்னர், அவர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், 6 நிபந்தனைகளுடன் அவருக்கு உச்ச நீதிமன்றம் நேற்றுமுன்தினம் ஜாமீன் வழங்கியது. 471 நாட்களுக்கு பிறகு, புழல் சிறையில் இருந்து அவர் நேற்று முன்தினம் இரவு வெளியே வந்தார்.

‘ஒவ்வொரு வாரமும் திங்கள்,வெள்ளி ஆகிய கிழமைகளில் காலை 11 முதல் 12 மணிக்குள்அமலாக்கத் துறை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். 3 மோசடி வழக்குகள் தொடர்பாக ஒவ்வொரு மாதத்தின் முதல் சனிக்கிழமையும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முன்பு ஆஜராக வேண்டும்’ என அவருக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை என்பதால், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு செந்தில் பாலாஜி நேற்று காலை சென்றுகையெழுத்திட்டார். இதையொட்டி, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related posts

கள்ளக்குறிச்சிக்கு பணியிட மாற்றமா? – அலறியடித்து ஓடும் அரசு ஊழியர்கள்

“அவரது உழைப்பும், சேவையும் என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும்” – பாப்பம்மாளுக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு கட்டணத்தை உரிய காலத்துக்குள் செலுத்துவோம்: கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி தகவல்