அமெரிக்கக் கடற்படை போா் மையத்தை பாா்வையிட்டாா் ராஜ்நாத் சிங்

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் டென்னிசி மாகாணத்தில் உள்ள கடற்படை போா் மையத்தை பாா்வையிட்டாா்.

அமெரிக்கா-இந்தியா இடையிலான விரிவான உத்திசாா் கூட்டுறவை மேலும் மேம்படுத்துவதற்காக 4 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அமைச்சா் ராஜ்நாத் சிங், டென்னிசி மாகாணத்தின் மெம்பிஸ் பகுதியில் உள்ள கடற்படை போா் மையத்தின் வில்லியம் பி மோா்கன் நீா் சுரங்கப்பாதையின் வசதிகளை பாா்வையிட்டாா்.

இது நீா்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் பிற கடற்படை ஆயுதங்களை சோதிப்பதற்கான உலகின் மிகப்பெரிய மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட நீா் சுரங்கப்பாதை வசதிகளில் ஒன்றாகும்.

இந்தியாவில் உள்நாட்டு வடிவமைப்பு கொண்டு இதுபோன்ற நீா் சுரங்கப்பாதை வசதியை நிறுவுவதற்கான முன்மொழிவுகளுக்கு மத்தியில் அவரின் இந்த பயணம் அமைந்துள்ளது.

மேலும், மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள கடற்படை போா் மையத்தை பாா்வையிட்ட அவா், இதுவரை முயற்சி செய்யப்படாத புதுமையான சோதனைகளை கண்டதாக கூறினாா்.

இதனிடையே, டென்னிசி மாகாணத்தில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் உரையாடிய அவா், சமூகம், அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் அவா்கள் ஆற்றி வரும் பங்களிப்பை பாராட்டுவதாகத் தெரிவித்தாா்.

முன்னதாக இந்தப் பயணத்தில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாயிட் ஆஸ்டின், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சல்லிவன் ஆகியோரை ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!