அமேதி ஆசிரியர் குடும்பம் படுகொலை: குற்றவாளி மீது என்கவுன்டர்!

அமேதியில், ஆசிரியர் மற்றும் அவரது மனைவி, இரண்டு பிள்ளைகள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முக்கிய குற்றவாளி சந்தன் வெர்மா மீது காவல்துறையினர் என்கவுன்டர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கைது செய்யப்பட்ட சந்தன் வெர்மா, கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதத்தை எடுத்துத் தருவதாக காவல்துறையினருடன் சென்றபோது, தப்பிச் செல்ல முயன்றதால், அவர் சுட்டுப்பிடிக்கப்பட்டதாகவும், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட ஆசிரியரின் மனைவி, கடந்த மாதம் அளித்த பாலியல் வன்கொடுமை புகார் மற்றும் கொலை மிரட்டல் புகாரில் சந்தன் வெர்மாவின் பெயர் இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டார். கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கியை எடுத்துத் தர காவல்துறையினருடன் சென்றபோது, காவல்துறையினரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்து சுட முயன்றதால், உடன் வந்த காவலர் தற்காப்புக்காக சந்தன் வெர்மாவின் காலில் சுட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில், வியாழக்கிழமை மாலை, பட்டியலினத்தைச் சேர்ந்த ஆசிரியர், அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் சந்தன் வெர்மாவால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களின் உடல்களுக்கு நடத்தப்பட்ட உடல் கூறாய்வில், ஆசிரியரை மூன்று முறையும், மனைவியை இரண்டு முறையும் 5 வயது மகள் மற்றும் 18 மாதக் கைக்குழந்தையை தலா ஒரு முறையும் சுடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில்தான், எனது குடும்பத்துக்கு கொலை மிரட்டல் இருப்பதாக கடந்த ஆகஸ்ட் மாதம் காவல்நிலையத்தில் பூனம் பாரதி புகார் அளித்திருப்பது தெரிய வந்தது. அந்த புகாரில், சந்தன் வெர்மா தன்னை தாக்கி, பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரில் குறிப்பிட்டிருக்கும் சந்தன் வெர்மா, ரே பரேலியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், குழந்தைக்காக ரே பரேலியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றபோது, அங்கு சந்தன் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், அதனைத் தட்டிக்கேட்ட தன்னையும் கணவரையும் அடித்துத் துன்புறுத்தி கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இதற்கு முன்பும், சந்தன் தன்னை துன்புறுத்தி, மிரட்டியிருப்பதாகவும், புகார் அளித்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியிருப்பதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுத்து தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று பூனம் வலியுறுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில்தான் வியாழக்கிழமை கொலைச் சம்பவம் நடந்து, நாட்டையே உலுக்கியது. குற்றவாளியை கைது செய்த காவல்துறையினர், இவர்களுக்கு இடையே வேறு ஏதேனும் முன்பகை இருந்திருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related posts

லடாக் ஆதரவாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

பெண் காவலருக்கு பாலியல் வன்கொடுமை!

ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!