அமைச்சரின் ஓட்டுநர் சடலமாக மீட்பு: உ.பி.யில் பரபரப்பு

அமைச்சரின் ஓட்டுநர் சடலமாக மீட்பு: உ.பி.யில் பரபரப்புஉத்தரப் பிரதேச அமைச்சரின் ஓட்டுநர் விருந்தினர் மாளிகையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச அமைச்சரின் ஓட்டுநர் விருந்தினர் மாளிகையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநில அமைச்சரின் ஓட்டுநராகக் கூறப்படும் 46 வயது நபர் ஞாயிற்றுக்கிழமை பரேலியில் உள்ள மாநில விருந்தினர் மாளிகையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இறந்தவர் பாரபங்கி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்வீர் சிங் என்றும், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தரம்பால் சிங்கின் ஓட்டுநர் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கோட்வாலி நிலைய காவல் அதிகாரி தினேஷ் சர்மா கூறுகையில், பரேலியில் உள்ள விருந்தினர் மாளிகையில் சனிக்கிழமை ராஜ்வீர் தங்கியிருந்திருக்கிறார். பின்னர் இரவில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை அமைச்சரின் பாதுகாவலர் விருந்தினர் மாளிகைக்கு சென்று பார்த்தபோது கதவு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார். உடனே கதவை உடைத்துத் திறந்தபோது, ​​ராஜ்வீர் காதில் ஹெட்ஃபோன்களுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டிருக்கிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

சடலம் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஷர்மா மேலும் தெரிவித்தார். அமைச்சர் தரம்பால் சிங், பரேலி மாவட்டத்தின் ஆன்லா பேரவைத் தொகுதியில் இருந்து பாஜக எம்எல்ஏவாக உள்ளார். அவர் வார இறுதி நாட்களில் இப்பகுதிக்கு அடிக்கடி செல்வார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. சம்பவம் நடந்த போது அவர் வேறு இடத்தில் இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இருப்பினும் இச்சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மதுரையில் துணை முதல்வர் உதயநிதியை நேரில் சந்தித்து நடிகர் வடிவேலு வாழ்த்து

‘இனி தினமும் உங்களை சந்திப்பேன்’ – மகளிரணி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு

தனியார் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மேலும் 7 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி