அம்பானி வீட்டுக் கல்யாணம்! 4 நாள்கள் போக்குவரத்து மாற்றம்!

அம்பானி வீட்டுக் கல்யாணம்! 4 நாள்கள் போக்குவரத்து மாற்றம்!அம்பானி இல்லத் திருமண விழாவுக்காக மும்பையில் போக்குவரத்து மாற்றம்.கோப்புப் படம்

அம்பானி இல்லத் திருமண விழாவுக்காக மும்பையில் 4 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஜியோ உலக மாநாட்டு மையம் அமைந்துள்ள பாந்த்ரா குர்லா வணிக வளாகத்தில் திருமண விழா நடைபெறவுள்ளதால், ஜூலை 12 முதல் 15ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதாக மும்பை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. ஏற்கெனவே ஜூலை 5ஆம் தேதிக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்ட் தம்பதிக்கு ஜூலை 12ஆம் தேதி மும்பையிலுள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெறவுள்ளது.

இதில், பல முக்கிய அரசியல் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் கலந்துகொள்ளவுள்ளதால், அந்த மையம் அமைந்துள்ள கிழக்கு மும்பையின் பாந்த்ரா பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மும்பை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 12 முதல் 15ஆம் தேதி வரை ஜியோ உலக மாநாட்டு மையத்தில் பொது நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில், அதிக எண்ணிக்கையிலான விருந்தினர்களும், விஐபிக்களும் பங்கேற்கவுள்ளதால், மக்களுக்கு சிரமம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், ஜியோ உலக மாநாட்டு மையத்தை சுற்றிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டு, போக்குவரத்து மாற்ற வழித்தடங்களைக் குறிப்பிட்டுள்ளது.

இதில் அம்பானி இல்லத் திருமண விழாவை பொது நிகழ்ச்சி எனக் குறிப்பிட்டு மும்பை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் பலர் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இது பொது நிகழ்ச்சி அல்ல? தனிப்பட்ட நிகழ்ச்சி? அதற்காக பொதுமக்களின் அன்றாட வழித்தடத்தை மாற்றுவதா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில், மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அம்பானி வீட்டு கல்யாணத்துக்காக போக்குவரத்து மாற்றங்களை செய்வது மிகவும் அவமானகரமான செயல். தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த அம்பானியின் அடிமைகளிடமிருந்து இதனை எதிர்பார்த்ததாகவும் விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

Related posts

திருப்பதி லட்டு விவகாரம் – சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு

மசோதாக்களை காரணமின்றி கவர்னர் நிறுத்தி வைக்கிறார் – சபாநாயகர் அப்பாவு

சத்தீஷ்கார்: வாலிபரை தீண்டிய பாம்பை தகனத்தின்போது உயிருடன் எரித்த கிராமவாசிகள்