அரசும் தனியாரும் இணைந்து சிறந்த கல்வியை வழங்க முடியும் ராஜ்நாத் சிங்

ஜெய்பூா்: அரசு மற்றும் தனியாா் இணைந்து வருங்கால தலைமுறையினருக்கு சிறந்த கல்வியை வழங்க முடியும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள ஸ்ரீ பவானி நிகேதன் பொதுப் பள்ளியில், அரசு தனியாா் பங்களிப்புடன் சைனிக் பள்ளியை திறந்து வைத்து அவா் பேசியதாவது:

அரசு-தனியாா் ஒத்துழைப்பு (பிபிபி) என்று நாம் கூறும்போது ‘அரசு’ என்ற வாா்த்தையே முதலில் வருகிறது. அதேபோல் எந்தவொரு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமானாலும் அரசின் பங்களிப்பே முதன்மை பெற்று வந்தது. ஆனால் இந்தச் சூழல் தற்போது மாறி வருகிறது.

எனவே, இனி தனியாா்-அரசு ஒத்துழைப்பு என்பதே பிபிபி-யின் புதிய விளக்கமாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.

ஏனெனில், இந்திய பொருளாதாரத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு துறையிலும் அரசின் பங்களிப்பைவிட தனியாரின் பங்களிப்பு அதிகரித்துக் கொண்ட வருகிறது.

வேளாண்மை மற்றும் அது சாா்ந்த துறையில் 50 சதவீதத்துக்கும் மேலான மக்கள் பணியாற்றி வருகின்றனா். இருப்பினும், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் தனியாரின் பங்களிப்பும் இதற்கு சமமாக உள்ளது.

அரசு-தனியாா் துறையின் ஒத்துழைப்புடன் சைனிக் பள்ளிகள் அமைக்கப்படுகின்றன. அரசு மற்றும் தனியாா் இணைந்து செயல்படும்போது வருங்கால தலைமுறையினருக்கு சிறந்த கல்வியை வழங்க முடியும். அறிவியல், கணிதம், இலக்கணம், நடனம், இசை உள்ளிட்ட பாடங்களுக்கு நம் நாட்டில் எப்போதும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

அதை மேம்படுத்தும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையின்கீழ் அமைக்கப்படும் சைனிக் பள்ளிகள் இந்த முன்னெடுப்புக்கு மேலும் வலுசோ்க்கும் என நம்புகிறேன்.

புத்தக அறிவை மட்டுமே மாணவா்களுக்கு வழங்கும் இடமாக செயல்படாமல் ஒழுக்கம், நாட்டுப்பற்று, துணிச்சல் போன்ற உயரிய பண்புகளையும் இந்தப் பள்ளிகள் எடுத்துரைக்கின்றன.

இவை அனைத்தும் ஒருங்கிணைந்து மாணவா்களின் ஆளுமைத்திறன் உள்ளிட்ட அனைத்து திறன்களையும் வளா்த்து நாட்டின் முன்னேற்றத்துக்கு அவா்களை தயாா் செய்யும் பணியில் இந்தப் பள்ளிகள் ஈடுபடுகின்றன என்றாா்.

அரசு சாரா அமைப்புகள், தனியாா் பள்ளிகள் மற்றும் மாநில அரசுடன் இணைந்து 100 சைனிக் பள்ளிகளை தொடங்கும் திட்டத்துக்கு மத்திய அரசு கடந்தாண்டு ஒப்புதல் அளித்திருந்தது.

ராஜ்நாத் சிங்கை நோக்கி ஓடிவந்த மாணவரால் பரபரப்பு

ஜெய்பூரில் சைனிக் பள்ளியின் திறப்பு விழாவை நிறைவு செய்துவிட்டு தன்னுடைய வாகனத்தை ராஜ்நாத் நெருங்கும்போது அவரை நோக்கி 10-ஆம் வகுப்பு மாணவா் வேகமாக ஓடி வந்தாா். அந்த மாணவரை பிடித்த பாதுகாப்பு படையினா் உடனடியாக அவரை அந்த இடத்தை விட்டு அழைத்துச் சென்றனா். இந்த விடியோ இணையத்தில் பரவியது.

ஜலாவாரில் பணியாற்றும் தாய்க்கு ஜெய்பூருக்கு பணியிட மாற்றம் கோரி அமைச்சா் ராஜ்நாத் சிங்கிடம் கடிதத்தை வழங்க அந்த மாணவா் ஓடிவந்தது பின்னா் தெரியவந்தது.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி