அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை: நடவடிக்கை எடுக்க முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்

புதுக்கோட்டை: அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர் பற்றாக்குறையை சரி செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவர் பேசியதாவது, அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பாம்புகடிக்கு சிகிச்சை பெற வந்த இளைஞர் உயிரிழந்திருக்கிறார். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆய்வுக்கு போகிற மருத்துவமனைகளிலேயே மருத்துவர் பணியில் இல்லை எனசெய்திகள் வருகின்றன. இந்த நிலையில் அறந்தாங்கியில் மட்டும் மருத்துவர் எப்படி இருப்பார்?

மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர் பற்றாக்குறை கடுமையாக இருக்கிறது. இதையடுத்து, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு போதுமான அளவுக்கு மருத்துவர்களை நியமிக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முழு மதுவிலக்கு கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாடு நடத்துவதை வரவேற்கிறேன். அதிமுக ஆட்சிக்காலத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில், முதல் கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. திமுக ஆட்சியில் அதுபோல எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

ஆனால், கூடுதலாக எப்எல்2 உரிமம் வழங்கப்பட்டு, அதிகளவில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுக்கடைகள் அதிகரித்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கஞ்சா புழக்கமும் அதிகரித்திருக்கிறது. இவற்றை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் விஜயபாஸ்கர்.

Related posts

வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: கிரண் ரிஜிஜு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்!

பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்