அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை…சுகாதாரத்துறைக்கு டி.டி.வி.தினகரன் கண்டனம்

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி. டி வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 40 சதவிகிதமும், புறநகர் மருத்துவமனைகளில் 33 சதவிகிதமும், மகப்பேறு மருத்துவமனைகளில் 25 சதவிகிதமும் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதால், அரசு மருத்துவமனைகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அசாதாரண சூழல் நிலவுவதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை குறித்தும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடு குறித்தும் பலமுறை சுட்டிக்காட்டியும், அதனை சீர்செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத்துறையால் பொதுமக்களும், நோயாளிகளும் கடும் இன்னல்களுக்குள்ளாகி வருகின்றனர்.

மிகவும் முக்கியத்துவமிக்க மகப்பேறு துறையில் நிலவும் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான முயற்சிகளை முன்னெடுக்காமல், பிரசவத்தின் போது தாய் – சேய் இறப்பு விகிதத்தை குறைக்க முயற்சிப்பது சாத்தியமற்றது என மருத்துவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி மாவட்ட அரசு மருத்துவமனைகள் வரை நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதோடு, அரசு மருத்துவமனைகளை நாடிவரும் ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார் .

Related posts

ஜெய்சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய ஆஸி., ஊடகத்திற்கு கனடா தடை: இந்தியா கண்டனம்

ரவீந்திரன் துரைசாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது திண்டிவனம் நீதிமன்றம்

விழுப்புரம் அரசு நீச்சல் குளத்தில் துணை முதல்வர் ஆய்வு – நீரை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு