அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு குறித்த ஐகோர்ட்டு தீர்ப்பை முதல்- அமைச்சர் செயல்படுத்த மறுப்பது ஏன்? – அன்புமணி ராமதாஸ்

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு தொடர்பான சிக்கலில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசு மருத்துவர்களின் கோரிக்கையை 6 வாரங்களுக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு ஆணையிட்டு, 6 மாதங்களுக்கு மேலாகியும் அதை நடைமுறைப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு தொடர்பான சிக்கலில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

திமுகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கலைஞர் கொண்டு வந்த பல்வேறு சட்டங்கள், அரசாணைகள் குறித்து ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் அளித்தத் தீர்ப்புகளை கொண்டாடும் தமிழக அரசு, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக தமிழக அரசு மருத்துவர்களின் ஊதியத்தையும் உயர்த்த வகை செய்யும் விதத்தில் கலைஞர் அரசு 2009ம் ஆண்டில் பிறப்பித்த அரசாணை எண் 354-ஐ செயல்படுத்த மறுப்பது ஏன்? ஊதிய உயர்வு குறித்த அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்கும்படி ஐகோர்ட்டு பிறப்பித்த ஆணையை செயல்படுத்தாதது ஏன்? என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு வினா எழுப்பியுள்ளது. அந்த வினாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும்.

அரசு மருத்துவர்களின் கோரிக்கை மிகவும் எளிமையானது; நியாயமானது.7 ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி மத்திய, மாநில அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் தொடக்கநிலை ஊதியம் ரூ.56,100 என்ற ஒரே அளவு தான். ஆனால், மத்திய அரசு மருத்துவர்களுக்கு முறையே 4, 9, 13, 20 ஆகிய ஆண்டுகளின் இறுதியில் வழங்கப்படும் காலம் சார்ந்த ஊதிய உயர்வும், பதவி உயர்வும் மாநில அரசு மருத்துவர்களுக்கு 8, 15, 17, 20 ஆகிய ஆண்டுகளின் இறுதியில் தான் வழங்கப்படுகிறது. இதனால் 14ம் ஆண்டில் தொடக்கத்தில் மத்திய அரசு மருத்துவர்கள் பெறும் அடிப்படை ஊதியமான ரூ. 1.23 லட்சத்தை, மாநில அரசு மருத்துவர்கள் 20-ஆவது ஆண்டில் தான் பெறுகின்றனர்; 14வது ஆண்டில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு ரூ.86,000 மட்டுமே கிடைக்கிறது. இந்த முரண்பாட்டை சரி செய்ய வேண்டும் என்பது தான் அரசு மருத்துவர்களின் கோரிக்கை ஆகும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2018ம் ஆண்டு அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்திய போது, அவர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சுகாதாரத் துறை கூடுதல் செயலர் தலைமையிலான குழு, 354-ஆவது அரசாணையின் எதிர்கால சரத்துகளின்படி 5, 9, 11, 12 ஆகிய ஆண்டுகளில் காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க பரிந்துரைத்தது. ஆனால், அது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. 2018ம் ஆண்டு அரசு மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று முழக்கமிட்ட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகு கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பது அநீதியானது.

கேரளம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு இணையான கல்வித்தகுதியும், பணிச்சுமையும் கொண்ட தமிழக அரசு மருத்துவர்களுக்கும் அவர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது தான் சரியானதாக இருக்கும். எனவே, சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை செயல்படுத்தும் வகையில், மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக, தமிழக அரசு மருத்துவர்களுக்கு அவர்களின் பணிக்காலத்தின் 5, 9, 11, 12 ஆகிய ஆண்டுகளில் ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்