அடுத்த 2 நாள்களில் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறேன் என்று அரவிந்த் கேஜரிவால் அறிவித்திருக்கும் நிலையில், அடுத்த முதல்வர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
பிணையில் விடுதலையாகி வெளியே வந்திருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தார்.
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, சிறையிலிருந்து வெளிவந்த அரவிந்த் கேஜரிவால், கட்சியின் மூத்த தலைவா்களுடன் தில்லியின் அரசியல் சூழல் மற்றும் ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக ஆலோசனை மேற்கொண்டிருந்தாா். இந்நிலையில், தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் புதிய தலைமையகத்தில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், தனது மனைவி சுனிதா கேஜரிவால் மற்றும் கட்சியின் பிற மூத்த தலைவா்களுடன் இணைந்து நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் மத்தியில் உரையாற்றியபோதுதான், யாரும் எதிர்பாராத வகையில், ராஜிநாமா முடிவை அறிவித்திருந்தார்.
சொல்லப் போனால்… டாப் விஐபிக்கள் சந்திப்பும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட சீசரின் மனைவியும்!
இதனால், அரவிந்த் கேஜரிவாலைத் தொடர்ந்து தில்லியின் அடுத்த முதல்வராக அமரப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேவேளையில் மணீஷ் சிசோடியாவும் தானும் பதவியில் அமர மாட்டோம் என்று கேஜரிவால் கூறிவிட்டதால், அடுத்த முதல்வர் என்ற இடத்தில் மணீஷ் சிசோடியா இல்லை என்பது உறுதியாகிவிட்டது.
தற்போதைய சூழ்நிலையில், தில்லி அமைச்சரும், கல்வி நிலைக்குழு தலைவருமான அதிஷி, முதல்வர் போட்டியில் முன்னிலையில் உள்ளார். தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சிறையில் இருந்தபோது, தில்லி நிர்வாகத்தை சிறப்பாகக் கையாண்டு வந்ததால், இவர் முதல் வரிசையில் உள்ளார்.
இவருக்கு அடுத்த இடத்தில் அமைச்சர் கோபால் ராய் உள்ளார். 49 வயதாகும் கோபால் ராய், ஆம் ஆத்மியில் பல ஆண்டு கால அனுபவம் கொண்டிருப்பவர், மாணவர் அமைப்பில் பணியாற்றி, அமைச்சராகி, தொழிலாளர் சமுதாயத்தினருடன் நெருங்கிய தொடர்பிருப்பதால் இவரது பெயரும் பேசப்பட்டு வருகிறது.
தில்லிக்கு எப்போது தேர்தல்?
தில்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரியில் தேர்தல் நடக்கவுள்ளது. ஆனால், தில்லி தோ்தலை மகாராஷ்டிரத்துடன் சோ்த்து நவம்பா் மாதத்திலேயே நடத்த வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன், மக்கள் எனக்கு நோ்மை சான்றிதழ் கொடுத்த பிறகுதான் முதல்வா் நாற்காலியில் அமருவேன். பாஜக என்னை ஊழல்வாதி என்று மக்களை நம்பவைக்க முயற்சிக்கிறாா்கள். பாஜகவால் மக்களுக்கு நல்ல பள்ளிகள் மற்றும் இலவச மின்சாரம் வழங்க முடியவில்லை.ஏனென்றால், அவா்கள் ஆளும் மாநிலங்களில் ஊழல் செய்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த ஓரிரு நாள்களில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தி, அதில், கட்சித் தலைவா் ஒருவா் தில்லியின் புதிய முதல்வராக பதவியேற்பாா். முதல்வா் பதவியை அடுத்த இரண்டு நாட்களில் நான் ராஜிநாமா செய்யப்போகிறேன் என்று அறிவித்திருந்தார்.
சிறையில் இருக்கும்போது, அரவிந்த் கேஜரிவால் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், பிணையில் வெளியே வந்து தனது ராஜிநாமா முடிவை அறிவித்திருக்கிறார் கேஜரிவால்.
அரவிந்த் கேஜரிவால் வெளியே வந்ததால், மகிழ்ச்சியில் இருந்த ஆம் ஆத்மி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சியை அளித்துள்ளது.