அருணாசல பிரதேசத்தில் ராணுவ டிரக் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 3 ராணுவ வீரர்கள் பலி

இட்டாநகர்,

அருணாசல பிரதேசத்தின் அப்பர் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள தபி கிராமத்திற்கு அருகே உள்ள டிரான்ஸ் அருணாசல நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் இன்று காலை 6 மணியளவில் ராணுவ வீரர்களை ஏற்றி சென்ற டிரக் ஒன்று சாலையை விட்டு விலகி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

உடனடியாக அப்பகுதியில் இருந்த மக்கள் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் நகாத் சிங், நாயக் முகேஷ் குமார் மற்றும் கிரெனேடியர் ஆஷிஷ் குமார் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்று ராணுவ வீரர்கள் மறைவுக்கு அம்மாநில முதல்-மந்திரி பிமா காண்டு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அப்பர் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள தபி அருகே நடந்த ஒரு சோகமான விபத்தில் ஹவில்தார் நகாத் சிங், நாயக் முகேஷ் குமார் மற்றும் கிரெனேடியர் ஆஷிஷ் குமார் ஆகிய மூன்று ராணுவ வீரர்களின் உயிரிழப்புகளால் நான் மிகவும் வேதனைப்படுகிறேன். தேசத்திற்கான அவர்களின் சேவை மற்றும் உயர்ந்த தியாகம் நினைவுகூரப்படும். மேலும் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

2016 ஜூன் 15 கொல்லம் கலெக்டர் அலுவலக குண்டு வெடிப்பு: மதுரையை சேர்ந்த மூவர் குற்றவாளிகள்

US To Test Hypersonic Nuclear Missile After Polls Close: Report

2024 Maruti Suzuki Dzire Officially Revealed, Launch On November 11