அவர்தான் எங்களை நம்பினார் – வெற்றிக்குப்பின் ரஷீத் கான் பேட்டி

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் தகுதிபெறும் என்று பிரையன் லாரா மட்டுமே கணித்திருந்தார்.

கிங்ஸ்டவுன்,

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.

அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 115 ரன்கள் மட்டுமே அடித்தது. இருப்பினும் மனம் தளராத அந்த அணி, முழு மூச்சுடன் போராடி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் முன்னேறி வரலாறு படைத்துள்ளது.

முன்னதாக இந்த தொடரின் அரையிறுதி குறித்து பல முன்னாள் வீரர்கள் கணித்திருந்த நிலையில், பிரையன் லாரா மட்டுமே ஆப்கானிஸ்தான் செமி பைனலுக்கு தகுதி பெறும் என்று கணித்திருந்தார். தற்போது அதை செய்து காட்டியுள்ள ஆப்கானிஸ்தான் பிரையன் லாராவை தலைகுனிய விடவில்லை என்று ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.

வெற்றிக்கு பின் இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அரையிறுதியில் இருப்பது கனவு போல் இருக்கிறது. நியூசிலாந்தை தோற்கடித்தபோது தான் எங்களுக்கு தன்னம்பிக்கை உருவானது. இதைப் பற்றி விவரிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை. பிரையன் லாரா மட்டுமே நாங்கள் அரையிறுதி வருவோம் என்று நம்பினார். இந்த தொடருக்கு முன்பாக அவரை சந்தித்த போது, 'நீங்கள் சொன்னதை நாங்கள் நிச்சயம் காப்பாற்றுவோம். உங்களுக்கு தலைகுனிவை கொண்டு வர மாட்டோம்' என்றேன். தற்போது அதை நாங்கள் சரி என்று நிரூபித்துள்ளோம்.

இந்த பிட்ச்சில் 130 – 135 ரன்கள் நல்ல இலக்கு என்று நினைத்தோம். அதனால் 15 – 20 ரன்கள் குறைவாகவே அடித்தோம். அதை 12 ஓவரில் சேசிங் செய்ய வங்காளதேசம் வரும் என்பது எங்களுக்கு தெரியும். அதையே நாங்கள் சாதகமாகவும் எடுத்துக் கொண்டு எங்களுடைய முயற்சியை போட்டோம். ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் லைனில் பவுலிங் செய்ய வேண்டும் என்பதே திட்டம்.

அதேபோல் ஒய்டு, லெக் பைஸ் அதிகமாக விட்டுக் கொடுக்கவில்லை. மழையை நம்பாமல் 100 சதவித உழைப்பை கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணமாக இருந்தது. டி20 கிரிக்கெட்டில் எங்கள் அணியில் சிறந்த அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பவுலிங்கில், திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். டி20 கிரிக்கெட்டில் திறமை இருந்தால், சாதிக்க முடியும். மனதளவில் நாங்கள் தயாராகவே இருந்தோம்

டி20 கிரிக்கெட்டில் பந்து வீச்சில் எங்களிடம் வலுவான அடிப்படை இருக்கிறது. மழை வந்தாலும் அரையிறுதி செல்ல 10 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும் என்பதை தவிர்த்து வேறு வழியில்லை. குல்பாடின் நன்றாக இருப்பார் என்று நம்புகிறேன். அவர் எடுத்த விக்கெட் பெரியது. இந்த வெற்றி எங்கள் நாட்டில் மிகப்பெரிய கொண்டாட்டத்தை உண்டாக்கும் தற்போது அரையிறுதியில் தெளிவான மனதுடன் விளையாடுவோம்" என்று கூறினார்.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி