ஆகஸ்ட் 11-ம் தேதி முதுநிலை நீட் தேர்வு: 500 முதல் 1000 கி.மீ.க்கு அப்பால் தேர்வு மையங்கள் – தேர்வர்கள் அதிருப்தி

ஆகஸ்ட் 11-ம் தேதி முதுநிலை நீட் தேர்வு: 500 முதல் 1000 கி.மீ.க்கு அப்பால் தேர்வு மையங்கள் – தேர்வர்கள் அதிருப்தி

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 500 முதல் 1000 கி.மீ.தொலைவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கில் செலவு செய்து தேர்வு எழுத வேண்டிய நிலையில் தேர் வர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ்,முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது.

அதன்படி எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கு 2024-25-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த ஜூன் 23-ம் தேதி நடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் இருந்து 25 ஆயிரம் மருத்துவர்கள் உட்பட நாடுமுழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்தி ருந்தனர்.

இந்நிலையில் தேர்வுக்கு முதல் நாள் இரவு நீட் தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக மத்திய அரசுஅறிவித்தது. இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வில் முறைகேடுகளால் ஏற்பட்ட பெரும்பரபரப்பே நீட் தேர்வு தள்ளிவைப் புக்கு காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், முதுநிலை நீட் தேர்வு வரும் 11-ம் தேதி காலை, மதியம் என இரண்டு ஷிப்ட்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்வு மையங்கள் ஒதுக்க விருப்பம் தெரிவித்த தேர்வர்களுக்கு ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் எங்கோஒரு இடத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அந்த தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு ரயில்களில் டிக்கெட்கிடைப்பதிலும் சிரமம் இருப்பதால்,விமானங்களில் ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக செலவு செய்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன்படி விமான கட்டணம், தங்குமிடம், உணவு என தேர்வு எழுதசெல்பவர்களுக்கு ரூ.30 ஆயிரத்துக்கும் அதிகமாக செலவு செய்யவேண்டியுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களை சேர்ந்த தேர்வர்களுக்கும் 500 முதல் 1000கி.மீ. தொலைவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டம் அல்லது அருகில் உள்ள மாவட்டங்களில் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்று தேர்வர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

வைகோ கண்டனம்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று விடுத்த அறிக்கை யில் கூறியிருப்பதாவது: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு எழுத உள்ளமாணவர்களுக்கு மன உளைச்சலையும் வீண் அலைச்சலையும் தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியம் ஏற்படுத்தி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழக மருத்துவ மாணவர்களை தொலை தூரத்தில் உள்ள தேர்வு மையங்களுக்கு அனுப்புவது என்பது உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது.

தமிழகத்தில் இருந்து இனி எவரும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகள் படிக்க அனுமதித்து விடக்கூடாது என்று சில சக்திகள் முயற்சிப்பது அப்பட்டமாக வெளிப்பட்டு இருக்கிறது. இதில் மத்திய அரசு உடனடியாக கவனம் செலுத்தி முதுநிலை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அம்மாநிலத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்து மறு அறிவிப்பு வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

ஹிஸ்புல்லா தலைவர் மரணம் எதிரொலி.. பாதுகாப்பான இடத்திற்கு சென்ற ஈரான் தலைவர்

ஓசூர் டாடா மின்னணு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

ஐ.நாவில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தான்: இந்தியா தக்க பதிலடி