ஆசிய பங்குச் சந்தைகள் உயர்வு! டிரம்ப் வெற்றி பெற்றால் நிலை என்ன?

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஆசிய பங்குச் சந்தைகள் பெரும்பாலும் ஏற்றம் கண்டுள்ளன.

இந்தியா, ஜப்பான், தைவான் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தை உயர்வுடன் தொடங்கியது. தென் கொரிய பங்குச் சந்தை எவ்வித மாற்றமுமின்றி உள்ளது. ஹாங் காங் வணிகம் மட்டும் 3% வரை சரிவை சந்தித்துள்ளது.

ஜப்பானின் பங்குச் சந்தையான நிக்கி பங்குகள் 263.50 புள்ளிகள் உயர்ந்து 38,843.50 புள்ளிகளாக வணிகமாகி வருகிறது. இது மொத்த வணிகத்தில் 0.68% உயர்வாகும்.

ஆஸ்திரேலியாவின் ஏ.எஸ்.எக்ஸ். வணிகம் 67.90 புள்ளிகள் உயர்ந்தது. தென் கொரியாவின் பங்குச் சந்தையான கோஸ்பி 4.05 புள்ளிகள் உயர்ந்தது.

தேர்தல் முடிவு விளைவு என்ன?

அமெரிக்காவில் 47வது அதிபரைத் தேர்வு செய்வதற்காக வாக்குப்பதிவு நேற்று (நவ. 5) மாலை 5.30 மணிமுதல் இன்று அதிகாலை வரை நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் மாகாணங்கள் வாரியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

தொடக்கத்தில் கமலா ஹாரிஸ் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தார். இதனால் இந்திய பங்குச் சந்தை உள்பட ஆசியாவின் பெரும்பாலான பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கின.

கருத்துக்கணிப்புகளும் கமலா ஹாரிஸுக்கு வாய்ப்புள்ளதாகத் தகவல் தெரிவித்ததால், நேற்றைய வணிகமும் உயர்வுடன் முடிந்தது.

தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் யார் வெற்றி பெறுவார் என்ற சூழல் நிலவுகிறது. பிற்பகல் 12 மணி நிலவரப்படி, குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 247 தொகுதிகளிலும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 214 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர்.

அதிபராக, 270 தொகுதிகளில் பெரும்பான்மை தேவை என்பதால், யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. எனினும் தற்போது வெற்றிக்கு அருகில் டொனால்ட் டிரம்ப் உள்ளார்.

டிரம்ப் வெற்றி பெற்றால் என்னவாகும்?

இந்தியா உள்பட ஆசிய நாடுகளின் பங்குச் சந்தையில் அமெரிக்க தேர்தல் மிகமுக்கிய பங்காற்றியது. அமெரிக்கத் தேர்தலால் பங்குச் சந்தை நிலையில் நம்பகத்தன்மை குறைந்ததால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலர் தங்கள் பங்குகளை விற்றனர். அக்டோபர் வரையில் மட்டும் ரூ. 94,017 கோடி மதிப்புடைய பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர்.

இந்தியாவின் நிதி மேலாண்மை மற்றும் முதலீட்டு வங்கியான நோமுரா இந்தியா கூறியதாவது, ''டொனால்ட் டிரம்ப்பின் வெற்றியின் மூலம் ஜப்பான் பங்குகள் எதிர்மறையாகச் செல்ல வாய்ப்புள்ளது. கமலா ஹாரிஸின் வெற்றி நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தலாம். வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் டிரம்ப் பின்னடைவில் இருந்தார்.

ஆனால், அமெரிக்காவில் போர்க்கள மாகாணங்களாக கருதப்படும், யாருக்கு வெற்றி என்று தீர்மானிக்கப்படாத தொகுதிகளில் டிரம்ப் முன்னிலை பெற்று வருகிறார். இது பங்குகளில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும்'' எனக் குறிப்பிட்டது.

மும்பையைச் சேர்ந்த எம்கே குளோபல் நிதி சேவை நிறுவனம் தெரிவித்ததாவது, ''டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி தோல்வி அடைந்தால், அமெரிக்க பங்குகள் மீண்டும் எழும்பும். தற்போதைய எழுச்சி தற்காலிகமானது. இது இந்திய பங்குச் சந்தைகளுக்கும் நேர்மறையான போக்கை அளிக்க வாய்ப்புள்ளது.

இருப்பினும், உலக அளவிலும், உள்நாட்டிலும் பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களை நிலைநிறுத்துவதில் சவால்கள் இருக்கும்.

டிரம்ப்பின் வீழ்ச்சி ஒரு குறுகிய கால வளர்ச்சியை அளிக்கலாம் என்று எங்கள் பங்கு நிர்ணயக் குழு நம்புகிறது'' எனத் தெரிவித்தது.

Related posts

சென்செக்ஸ் 600 புள்ளிகள் நிஃப்டி 200 புள்ளிகள் உயர்வு!

லாரன்ஸ் பிஷ்னோய் டி-ஷர்ட் விற்பனையை நிறுத்தியது மீஷோ!

கோவை நூலகத்துக்கு பெரியார் பெயர்: மு.க. ஸ்டாலின்