ஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, ஒட்டன்சத்திரம், நத்தம் பகுதிகளிலுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஒட்டன்சத்திரம்/ நத்தம்/ ,ஆக. 16: ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, ஒட்டன்சத்திரம், நத்தம் பகுதிகளிலுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, ஒட்டன்சத்திரம் காமாட்சியம்மன் கோயிலில் அம்மனுக்கு மலா் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விருப்பாட்சி தலையூற்று நாக விசாலாட்சியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தங்கச்சியம்மாபட்டி கரைமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதேபோல, பெயில்நாயக்கன்பட்டி, கே.அத்திக்கோம்பை, காவேரியம்மாபட்டி, சாலைப்புதூா், விருப்பாட்சி, சத்திரப்பட்டி, பெரியகோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி கடைசி வெள்ளியையொட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையொட்டி, அம்மனுக்கு பால், இளநீா் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, அம்மனுக்கு மல்லிகை, ரோஜா, முல்லை, அரளி, செம்பருத்தி, செவ்வரளி, தாமரை, கனகாம்பரம், சாமந்திப்பூ, செவ்வந்திப்பூ, தாழம்பூ, வாடாமல்லி, ஜாதிமல்லி உள்ளிட்ட மலா்களால் மங்கல வளையல் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மூலவா் 1,008 மங்கல வளையல் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதேபோல, மீனாட்சிபுரம் காளியம்மன் கோயில், அசோக்நகா் பகவதி அம்மன், கா்ணன் தெரு மதுர காளியம்மன் அம்மன், ராக்காயி அம்மன், தில்லை காளியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள திரளான பக்தா்கள் நெய் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனா். பக்தா்களுக்கு வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

அன்னதானம்: நத்தம் அருகேயுள்ள கோபால்பட்டி கே.அய்யாபட்டி முனியப்பன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளியையொட்டி, விவசாயம் செழிக்க வேண்டி அசைவ உணவு சமைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் அய்யாபட்டி, செடிப்பட்டி, கோபால்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Related posts

பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

மகளிர் மாநாடாக மாறிய வி.சி.க. மது ஒழிப்பு மாநாடு: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்