ஆதிதிராவிட மக்களின் நலன் காப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகிறது – அரசு பெருமிதம்

ஆதிதிராவிட மக்களின் நலன் காப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் அம்பேத்கர் ஆகியோர் வழியில் முத்தமிறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் ஆதிதிராவிடர்கள் மேம்பாட்டிற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டன. பெரியார் நினைவு சமத்துவபுரங்களை ஏற்படுத்தி சாதிமத பேதமின்றி ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் உட்பட அனைத்து மக்களுடன் சேர்ந்து வாழும் வரலாற்றுப் பெருமையை நிகழ்த்தினார்.

ஆதிதிராவிடர் சமுதாயத்திற்கு பாடுபட்ட சுவாமி சகஜானந்தா கலையரங்கம், தியாக சீலர் கக்கன் மணிமண்டபம், அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம், கட்டபொம்மன் தளபதி வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபம் ஆகியவற்றை கலைஞர் அமைத்த்தோடு, அண்ணல் அம்பேத்கர் பெயரில் இந்தியாவிலேயே முதன் முதலாக சட்டப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தி ஆதிதிராவிட சமுதாய சீர்திருத்தவாதிகள் மற்றும் முன்னோடிகளை உலகிற்கு அடையாளம் காட்டினார்.

தமிழ்நாட்டின் காவல்துறை தலைவராகவும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராகவும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராகவும், முதல்-அமைச்சரின் செயலாளர்களாகவும் ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை நியமித்து ஆதிதிராவிடர் சமுதாயத்திற்கு பெருமைகளை சேர்த்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்தான்.

முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு சிலை, அயோத்திதாச பண்டிதருக்குச் சிலை, திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்குச் சிலை மற்றும் மணிமண்டபம் உள்ளிட்ட ஆதிதிராவிட சமுதாயப் பெருமக்களுக்கு சிறப்புகளைச் செய்து வருகிறார். மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் ஒருங்கிணைந்த சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் நிறைவேற்றி வருகிறார்.

இளைஞர்களின் கல்வித் திட்டங்களுக்குரூ.2,252 கோடி நிதி ஒதுக்கீடு. 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விடுதிக் கட்டடங்கள். 2,000 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு இலவச மின்

இணைப்புகள். ரூ.100 கோடியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம். ரூ.1,000 கோடியில் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத்திட்டம். இந்தியாவிலேயே ஆதிதிராவிட மக்களின் நலன் காப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகிறது.

ஆதிதிராவிட சமுதாய மக்களின் முன்னேற்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்தி வருவதன் காரணமாக வாழ்க்கைத்தரம் நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வருகிறது. அரசின் சீரிய முயற்சி காரணமாக ஆதிதிராவிட இளைஞர்கள் கல்வியிலும் தொழிலிலும் முன்னேற்றம் அடைந்து சமத்துவ சமுதாயத்தின் பிரதிநிதிகளாக உருவாகி வருகிறார்கள். இந்தியாவின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களிலும், வெளிநாடுகளிலுள்ள சிறந்த கல்வி நிறுனங்களிலும் உயர்கல்வி படிப்பினையும், முனைவர் படிப்பினை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை… குடும்பத் தகராறில் விபரீதம்

மோடி ஆட்சிதான் காமராஜர் ஆட்சி – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி