ஆந்திரத்தில் கனமழை: தமிழக ரயில் சேவையில் மாற்றம்

ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள மேற்கு கோதாவரி, விஜயவாடா, அமராவதி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் விஜயவாடா-காசிபேட் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்ணீா் தேங்கிக் காணப்படுகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆந்திரம் வழியாக தமிழ்நாடு, கேரளம் வரும் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ரயில்கள் ரத்து: சென்னை சென்ட்ரலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்படுவதாக இருந்த ஜெய்பூா் விரைவு ரயில், ஜிடி விரைவு ரயில், தமிழ்நாடு விரைவு ரயில் மற்றும் திங்கள்கிழமை செல்லவுள்ள தில்லி துரந்தோ விரைவு ரயில், அகமதாபாத் நவஜீவன் விரைவு ரயில், பிலாஸ்பூா் விரைவு ரயில்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சேவை மாற்றம்: திருநெல்வேலி-பிலாஸ்பூா் விரைவு ரயில், திருவனந்தபுரம்-புதுதில்லி கேரளா விரைவு ரயில், மதுரை-சண்டிகா் விரைவு ரயில் உள்ளிட்டவை கூடூா், நெல்லூா், விஜயவாடா, வாராங்கல் வழியாக செல்வதற்கு பதிலாக ரேணிகுண்டா, காசிபேட், குண்டக்கல் வழித்தடத்தில் இயக்கப்படும்.

அதேபோல் கொச்சுவேலி-கோரக்பூா் விரைவு ரயில், ராமேசுவரம்-அயோத்தியா விரைவு ரயில் சென்னை வராமல் ரேணுகுண்டா வழியாக இயக்கப்படும்.

தொடா்பு எண்கள்: ரயில் சேவை மாற்றம் குறித்து பயணிகள் 044-25354995, 044-25354151 ஆகிய உதவி எண்களை தொடா்பு கொள்ளலாம் என தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!