விஜயவாடா,
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கடந்த மூன்று நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக இரு மாநிலங்களிலும் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. ரெயில் சேவை, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்சாரமும் துண்டிக்கப்பட்ட நிலையில், வீட்டை வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள் வீடுகளுக்குள்ளேயும் மொட்டை மாடிகளிலும் தங்கும் நிலை ஏற்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் மாநில, தேசிய பேரிடர் மீட்புப்படையினரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவை கூட கிடைக்காமல் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
நிவாரணப் பணிகளின் ஒரு பகுதியாக, அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 197 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 48 மாநில, தேசிய பேரிடர் மீட்புப்படை குழுக்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உணவு விநியோகத்திற்காக ஆறு ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் உணவு, தண்ணீர், பிஸ்கட், பழங்கள் மற்றும் பால் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.