ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? புகார் அளிக்கலாம்! – அமைச்சர் பேட்டி

தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை வருகிற வியாழக்கிழமை(அக். 31) கொண்டாடப்படவுள்ள நிலையில், நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு இந்த வார இறுதி முதல் மக்கள் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

ரயில்களிலும், ஆம்னி பேருந்துகளிலும் டிக்கெட் முன்பதிவுகள் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டன. ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது அறிவிக்கும் சிறப்பு ரயில்களிலும் உடனடியாக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழக அரசுத் தரப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

மேலும் இன்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் அமைச்சர் சிவசங்கர் சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் சிவசங்கர்,

'தீபாவளி பண்டிகையையொட்டி, ஆம்னி பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் இருந்து உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகளில் அதிகம் கட்டண வசூலிப்பதாகப் பெறப்படும் புகார்களையடுத்து, அரசு சார்பில் கட்டணமில்லா எண் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | கருப்பை வாய்ப் புற்றுநோய்: சென்னையில் மறுக்கப்படும் பரிசோதனை?

தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்னதாக ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டண வசூலிப்பதாக புகார் வரும்பட்சத்தில் அவர்கள் மீது நிச்சயம் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.

பயணம் முடிந்து சென்னைக்கு திரும்பும் பயணிகளுக்கு எந்தவித போக்குவரத்து பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார்.

தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 1800 425 6151, 044 24749002, 044 26280445, 044 26281611 ஆகிய எண்களில் பயணிகள் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாஜக மன்னிப்பு கோர வேண்டும்: காங்கிரஸ்

நியூஸி.யை வீழ்த்தி இந்திய மகளிரணி அபார வெற்றி!

பேட்ஸ்மேன்கள் அதிக பொறுப்புடன் விளையாட வேண்டும்: மெஹிதி ஹாசன் மிராஸ்