ஆம்பூர் அருகே பள்ளி மாணவர்கள் சாலை மறியல்!

ஆம்பூர் அருகே பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட ராமச்சந்திராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் ஒன்று பழுதடைந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்த கட்டடம் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.

இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளாகியும் புதிய கட்டடம் கட்டித் தரப்படாததால் ஒரே அறையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வந்த நிலையில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டதால் பள்ளி வளாகத்தில் உள்ள தரையில் அமர்ந்து கல்வி பயின்று வந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை துறை சார்ந்த அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் பள்ளி வளாகத்தில் அமர்ந்து மாணவர்கள் பயின்று வந்ததால் மாணவர்கள் டெங்கு போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பள்ளி மாணவர்களுடன் ஆம்பூர் பகுதியிலிருந்து பேரணாம்பட்டு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு முன்பு அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.,

இதுகுறித்து தகவல் அறிந்த உமராபாத் காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர், வட்டார வளர்ச்சி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடக்கூடிய பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்த முயன்றதால் பொது மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அதேபகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி சங்கர் என்பவரை டிஎஸ்பி அறிவழகன் கன்னத்தில் அறைந்து அவரை காவல்துறை வாகனத்தில் ஏற்ற முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சுமார் 2 மணி நேரப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக கட்டடப் பணிகள் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்வதாக உறுதி அளித்த பின்னர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஆம்பூர் பேர்ணாம்பட்டு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இருபுறமும் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் பள்ளி கல்லூரி பல்வேறு பணிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Related posts

அண்ணாநகரில் ஒரு மணி நேரத்தில் 90 மி.மீ மழை!

இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமுக்கு திருமணம்!

சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளை மாற்றம்!