ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் 3 பேர் கைது: நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்தவர்கள்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் 3 பேர் கைது: நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்தவர்கள்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்,மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்த குற்றச்சாட்டின் கீழ் இவர்களிடம் போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலதலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொலை செய்யப்பட்டார். இந்த வழக்குதொடர்பாக ரவுடிகள், திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், வழக்கறிஞர்கள் என 24 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். பிரபல ரவுடிகளான சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இதில் சம்போ செந்திலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக வழக்கறிஞரான கிருஷ்ணகுமார் என்ற மொட்டை கிருஷ்ணன் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

அவர்மலேசியா தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச போலீஸ் உதவியுடன் சம்போ செந்திலுக்கு சென்னை போலீஸ் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ராஜேஷ், கோபி, குமரன் ஆகிய மேலும் 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். இவர்கள் தலைமறைவாக உள்ள சம்போ செந்திலின் நெருங்கிய கூட்டாளிகள் என கூறப்படுகிறது.

அதாவது ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிய கும்பல், அவர் அரிவாள் வெட்டிலிருந்து தப்பினால் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய திட்டமிட்டு, தயாராக 5 நாட்டு வெடிகுண்டுகளையும் கொண்டு சென்றிருந்தனர்.

இந்த வெடிகுண்டுகளை சம்போ செந்தில் மூலம் பெற்று அதை, ஏற்கெனவே கைதான ஹரிகரனிடம் கொடுத்திருந்தனராம். அவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட திருவேங்கடத்திடம் கொடுத்தாராம்.

இந்த நாட்டு வெடிகுண்டு விவகாரத்தில் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த இருவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், ஆம்ஸ்ட்ராங்கொலை வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணை

அதிகமான பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் – ராகுல் காந்தி அழைப்பு

எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த பாஜக திட்டம்-உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு