ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக கவுன்சிலர் கைது: கூவம் ஆற்றில் வீசப்பட்ட செல்போன்கள் மீட்பு

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட செல்போன்களை கொலையாளிகள் கூவம் ஆற்றில் வீசியுள்ளனர்.

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி சென்னையில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரம்பூர் அயனாவரத்தில் அவர் புதிதாக கட்டிவரும் வீடு அருகே வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் அவரை வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடினர். தமிழகம் முழுவதும் இந்த படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், அருள் உள்ளிட்ட 11 பேர் கொலை நடந்த அன்றைய இரவே கைது செய்யப்பட்டனர். இதில், போலீசார் பிடியில் இருந்து தப்பியோடிய கொலையாளி திருவேங்கடம் என்கவுண்ட்டர் முறையில் போலீசாரால் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை என்பவரை போலீசார் நேற்று கைதுசெய்தனர். மொத்தம் 15 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே கைதாகியுள்ள அருள் என்பவரின் செல்போன், ஹரிதரன் என்பவரிடம் இருந்ததால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

கைதாகியுள்ள ஹரிதரன், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலராக உள்ளார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட செல்போன்களை உடைத்து கூவம் ஆற்றில் வீசியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதாவது, ஆம்ஸ்ட்ராங்க கொலை செய்வதற்காக கொலையாளிகள் செல்போன் மூலம் திட்டம் போட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த பின்னர், இந்த செல்போன்களை உடைத்து திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூர் கூவம் ஆற்றில் ஹரிதரன் வீசியுள்ளார்.

ஹரிதரன் கொடுத்த வாக்குமூலத்தில் அடிப்படையில் ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் போலீசார் செல்போன்களை மீட்டுள்ளனர். மொத்தம் 5 செல்போன்கள் மீட்கப்பட்டு உள்ளது. மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்