ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஹரிதரன் அதிமுகவில் இருந்து நீக்கம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிதரனை அதிமுகவில் இருந்து நீக்கி கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை,

சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர் ஹரிதரன் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே கைதாகி உள்ள வக்கீல்களான அருண், ஹரிஹரன் ஆகிய 2 பேருக்கும் இவர் நெருங்கிய நண்பர் ஆவார்.

ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு குற்றவாளிகள் பயன்படுத்திய 6 செல்போன்கள் இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணையில் இவர் இந்த செல்போன்களை சேதப்படுத்தி திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூர் அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில் வீசி இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் நீச்சல் பயிற்சி பெற்ற தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ஆற்றில் வீசப்பட்ட 6 செல்போன்களில் 3 செல்போன்களை மீட்டுள்ளனர். இந்த செல்போன்களில் உள்ள தரவுகளையும், ஆற்றில் வீசப்பட்டுள்ள மற்ற செல்போன்களையும் மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ஹரிதரனும் வக்கீல் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஹரிதரன் அதிமுகவில் இருந்து நீக்கி கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஹரிதரன் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Related posts

2025-இல் இந்தியாவில் க்வாட் மாநாடு: பிரதமர் மோடி

திருப்பதி லட்டு விவகாரம்: ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது

திருப்பதி லட்டு விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்