ஆம்ஸ்ட்ராங் வழக்கு: துபை விரைகிறது காவல் துறை!

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாகியுள்ள சம்போ செந்திலைப் பிடிக்க, காவல் துறை அதிகாரிகள் துபை செல்லத் திட்டமிட்டுள்ளனர்.

துபையில் சம்போ செந்தில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவரைப் பிடிக்கும் முயற்சியில் காவல் துறை அங்கு செல்லவுள்ளது.

இன்னும் ஓரிரு நாள்களில் சென்னை காவல் துறையின் தனிப்படை விமானம் மூலம் துபை செல்லவுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கடந்த வாரம் 30 பேர் மீது 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றம்சாட்டப்பட்ட முதல் நபராக ரௌடி நாகேந்திரன் பெயா் சோ்க்கப்பட்டுள்ளது. மேலும், கொலை வழக்கு தொடா்பான 500 தடயங்கள், 200 சாட்சியங்கள் குற்றப்பத்திரிகையில் சோ்க்கப்பட்டுள்ளன.

28 பேர் மீது வழக்கு

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5-ஆம் தேதி சென்னை அருகே பெரம்பூரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், இதுவரை 28 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களில் காங்கிரஸ், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் முன்னாள் நிா்வாகிகளும், ரெளடிகளும், வழக்குரைஞா்களும் உள்ளனா்.

இந்த வழக்கில் முதல் கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், செம்பியம் காவல் துறையினர் சுமாா் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை எழும்பூா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இதையும் படிக்க | வெப்பம்.. நெரிசல்.. சாதனைக்காக நடந்த விமான சாகசத்தை சோதனையாக்கியது எது?

தலைமறைவாக இருந்து வரும் ரௌடி சம்போ செந்தில், வழக்குரைஞா் மொட்டை கிருஷ்ணன் ஆகிய இருவரையும் சோ்த்து 30 போ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், தலைமறைவாக இருந்துவரும் சம்போ செந்தில் துபையில் இருப்பதாகக் காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து காவல் துறை அதிகாரிகள் ஓரிரு நாள்களில் தனிப்படை விமானம் மூலம் துபைக்குச் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்