ஆயிரத்தில் ஒருவன் கொடுத்த வேதனை என்றும் மறையாது: செல்வராகவன்

ஆயிரத்தில் ஒருவன் படத்தால் அனுபவித்த வலிகளைப் பகிர்ந்துள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

இயக்குநர் செல்வராகவன் – கார்த்தி கூட்டணியில் பிரம்மாண்ட படமாக உருவானது ஆயிரத்தில் ஒருவன். இப்படம் வெளியானபோது கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்து வணிக ரீதியாகத் தோல்வியடைந்தது. முக்கியமாக, ஈழ பிரச்னையால் இப்படம் விமர்சனங்களையும் எதிர்கொண்டது.

ஆனால், ஆச்சரியமாக காலம் செல்லச் செல்ல ஆயிரத்தில் ஒருவன் படத்தை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். இன்றும் ஆண்டிற்கு ஒருமுறை இப்படம் மறுவெளியீடு காண்கிறது.

இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய செல்வராகவன், "ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் கொடுத்த ரணங்களும், காயங்களும், வலிகளும் கொஞ்சமல்ல. என்னால் எப்போதும் இதை மறக்க முடியாது. இவ்வளவு வேதனையை யாரும் அனுபவித்திருக்க மாட்டார்கள். பாம்புகள், தேள்கள், அட்டைகளுக்கு நடுவே இப்படத்தை எடுத்து முடித்தோம். ஒட்டுமொத்த படக்குழுவும் கடின உழைப்பைக் கொடுத்து இதை உருவாக்கினோம். பாதி படப்பிடிப்பு தாண்டியபோது சொன்ன படஜெட்டில் படம் முடியாது எனத் தெரியவந்தது. நான் தயாரிப்பாளர் ரவீந்திரனிடம் மீதித்தொகையை நான் செலுத்துகிறேன் என்றேன்.

திருமணத்திற்கு பிறகு கோவையில் நடக்கும் பெரிய நிகழ்ச்சி: கார்த்தி நெகிழ்ச்சி

ஆனால், இந்த மாதிரி படத்தை நான் தயாரிக்க வேண்டும் என அவர் மேற்கொண்டு ரூ. 5 கோடி முதலீடு செய்தார். ஆனால், அப்போதும் அப்படம் முடியவில்லை. நான் வட்டிக்கு வாங்கி முதலீடு செய்து பல நாள்கள் தூக்கத்தை இழந்து ஒருவழியாகத் திரைக்குக் கொண்டு வந்தோம். ஆனால், தமிழில் ஆயிரத்தில் ஒருவனைக் குத்திக் கொன்றனர். இந்தப் படத்தை எடுப்பதற்கு எனக்கு என்ன தகுதியிருக்கிறது? என போஸ்டர்கள் அடித்து ஒட்டினர். நாள்கள் செல்லச் செல்ல எதிர்ப்புகள் அதிகரித்தன. தெலுங்கில் நன்றாக பேசப்பட்டது. ஆனால், தமிழில் என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. இப்படத்தில் கடுமையாக உழைத்த கார்த்தி, பார்த்திபன், ரீமா சென், ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோர்க்கு இன்றுவரை எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. அதை நினைத்து இன்றுவரை அழுதுகொண்டுதான் இருக்கிறேன்.

ஆயிரத்தில் ஒருவன் காட்சி.

தமிழ் மன்னர்கள், அரசர்கள் பற்றி ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு முன் பெரிய முயற்சிகள் நடக்கவில்லை. நாங்கள்தான் சோழர்களைப் பற்றி பலகட்ட ஆய்வுகளுக்குப் பின் படத்தை எடுக்கலாம் என்பதை செய்துகாட்டினோம். மன்னர்கால படங்களை உருவாக்குபவர்கள் எங்களுக்கு நன்றியாவது தெரிவியுங்கள்.” என உருக்கமாகப் பேசியுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்வேன்: ஜெயசூர்யா

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!