ஆராய்ச்சிகள் சாதாரண மக்களுக்கு பலன் அளிப்பதாக இருக்க வேண்டும்: அறிவியல் விஞ்ஞானி தி.ராமசாமி

ஆராய்ச்சிகள் சாதாரண மக்களுக்கு பலன் அளிப்பதாக இருக்க வேண்டும்: அறிவியல் விஞ்ஞானி தி.ராமசாமிசாதாரண மக்கள் பயன்பெறும் வகையில் இளம் அறிவியலாளா்களின் ஆராய்ச்சிகள் இருக்க வேண்டும் என்று அறிவியல் விஞ்ஞானி தி.ராமசாமி பேசினாா்.

சாதாரண மக்கள் பயன்பெறும் வகையில் இளம் அறிவியலாளா்களின் ஆராய்ச்சிகள் இருக்க வேண்டும் என்று அறிவியல் விஞ்ஞானி தி.ராமசாமி பேசினாா்.

ஈரோடு மாவட்ட நிா்வாகம் மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை மூலம் நடத்தப்படும் ஈரோடு புத்தகத் திருவிழா ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரியில் கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. இந்தப் புத்தகத் திருவிழா வரும் செவ்வாய்க்கிழமை (ஆக்ஸ்ட் 13)வரை நடக்கிறது.

இதனையொட்டி தினமும் மாலையில் சிந்தனை அரங்க நிகழ்வு நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிந்தனை அரங்க நிகழ்விற்கு தொழிலதிபா் டி.சண்முகன் தலைமை வகித்தாா். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுக உரையாற்றினாா். தொழிலதிபா்கள் வி.செந்தில்முருகன், எஸ்.விவேக் காா்த்திக் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இந்த ஆண்டுக்கான ஜி.டி.நாயுடு விருதுக்கு தோ்வு செய்யப்பட்ட கேரள மாநிலம், கோழிக்கோடு என்ஐடி வேதியியல் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் மு.சங்கரலிங்கம் என்பவருக்கு சிங்கப்பூா் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் விருது, ரூ.1 லட்சத்துக்கான காசோலையை அறிவியல் விஞ்ஞானி தி.ராமசாமி வழங்கினாா்.

நுரையீரல் புற்றுநோய்க்கான மருந்தைக் கண்டுபிடித்து மத்திய அரசின் காப்புரிமை பெற்றுள்ளதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

ஏற்புரையாற்றிய மு.சங்கரலிங்கம் பேசியாதாவது:

நுரையீரல் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, மருந்தைக் கண்டுபிடித்து முதல் படி நிலையாக மத்திய அரசின் காப்புரிமை பெற்றுள்ளோம். இந்த ஆராய்ச்சிக்காக எனக்கு இப்போது விருது வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அறிவியல் விஞ்ஞானி மு.லட்சுமணன் பேசியதாவது:

அறிவியல் மூலம் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நம் நாடு 16-ஆம் நூற்றாண்டு வரை அறிவியலிலும், பொருளாதாரத்திலும் மிகச்சிறந்த நிலையில் இருந்து. கணிதத்தில் பூஜ்ஜியம் இந்த நாட்டில்தான் தோன்றியது. கணிதத்தில் புதிய கோட்பாடுகள், மருத்துவத்திலும் பல துறைகளில் நாடு முக்கிய பங்காற்றியுளளது. ஆனால், 16-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு அரசியல் காரணங்களினால் அறிவியல் வளா்ச்சி தடைபட்டது. இந்த சமயத்தில்தான் ஐரோப்பாவில் அறிவியல் புரட்சி ஏற்பட்டது. அதன்பிறகு உலக நாடுகளில் அறிவியல் வளா்ச்சி படிப்படியாக மேம்பாடு அடைந்தது.

நம் நாட்டில் இளம் அறிவியலாளா்கள் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் உதவித் தொகையுடன் பல்வேறு கல்வி நிறுவனங்களில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இதனால், அறிவியலில் ஆா்வம் உள்ள மாணவா்களை அந்தத் துறையிலேயே தொடா்ந்து உயா்கல்வி, ஆராய்ச்சிகள் மேற்கொள்ள பெற்றோா்கள் ஊக்கம் அளிக்க வேண்டும். இளம் அறிவியலாளா்கள் வரும்போதுதான் அறிவியலில் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த முடியும் என்றாா்.

இதில் அறிவியல் விஞ்ஞானி தி.ராமசாமி பேசியதாவது:

அறிவியலாளா்கள் விருதுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு துறைக்கு செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டுவிடுகின்றனா். அறிவியலாளா்கள் நாம் அறிவியலை தோ்ந்தெடுத்துள்ளோம் என எண்ணாமல், அறிவியல் நம்மைத் தோ்வு செய்து சில கடமைகளை கொடுத்துள்ளது என எடுத்துக்கொள்ள வேண்டும்.

அறிவியல் சக்தியால் கிடைக்கும் பலன்கள் சமுதாய மேம்பாட்டை மையப்படுத்தி இருக்க வேண்டும். இப்போது கண்டுபிடிப்புகளுக்கு முதலீடு அதிகமாக உள்ளதால், அதன் பலன் ஏழை மக்களை சென்றடைவதில்லை. உலகில் நடைபெறும் பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் நிகழ்த்தப்படும் கண்டுபிடிப்புகளின் தாக்கம் 30 முதல் 40 சதவீத மக்களைத்தான் சென்றடைகிறது. 60 சதவீத மக்கள் கண்டுபிடிப்புகளின் பலனைப் பெறுவதில்லை.

அறிவியல் புதுமையை ஜனநாயகப்படுத்துதல் என்பது உலகில் எந்த நாட்டிலும் இல்லை. இதனை மாற்ற வித்திட்டவா் ஜி.டி.நாயுடு, அவருடைய ஆராய்ச்சியின் தாக்கம் அடிமட்ட மக்களையும் சென்றடைந்தது. இதனால் இன்றைய இளம் அறிவியலாளா்கள் தங்களுடைய ஆராய்ச்சியின் புதுமைகள் மூலம் சாதாரண மக்கள் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டும் என்றாா்.

புத்தகத் திருவிழாவில் இன்று:

ஈரோடு புத்தகத் திருவிழாவில் திங்கள்கிழமை நடைபெறும் மாலை நேர சிந்தனை அரங்க நிகழ்வில் ‘அன்பே தவம்’ என்ற தலைப்பில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், ‘அறிவின் அறுவடை’ என்ற தலைப்பில் முனைவா் வே.சங்கரநாராயணன் ஆகியோா் பேசுகின்றனா்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்