ஆரூயிர் நண்பரை இழந்துவிட்டேன்: நாராயண மூர்த்தி!

எனது ஆருயிர் நண்பர், டாடா சன்ஸ் தலைவராக இருந்த ரத்தன் டாடாவை இழந்தது மிகவும் வேதனையளிக்கிறது என்று இன்ஃபோஸிஸ் இணை நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி தெரிவித்தார்.

தொழிலதிபர் ரத்தன் டாடா முதுமை காரணமாக மும்பையில் உள்ள பிரீச்கேண்டி மருத்துவமனையில் கடந்த திங்களன்று அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் அவர் காலமானதாக டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் உறுதி செய்தார்.

இவரது மறைவுக்குப் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது கோரி மகாராஷ்டிர அமைச்சரவையில் தீர்மானம்!

இந்த நிலையில், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ரத்தன் டாடாவை இழந்தது மிகவும் வேதனையளிக்கிறது.

எப்போதெல்லாம் எனக்கு நெறிமுறை சிக்கல், தெளிவின்மை மற்றும் குழப்பம் ஏற்படுமோ அப்போதெல்லாம் ரத்தன் டாடா எனக்கு ஒரு தார்மீக திசைகாட்டியாக இருந்தவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

விருது வழங்கும் நிகழ்வை பகிர்ந்த நாராயணமூர்த்தி

கடந்த 2020ல் மும்பையில் டைகான் அமைப்பு சார்பில் நடந்த விருது வழங்கும் விழாவில் ரத்தன் டாடாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி ரத்தன் டாடாவிற்கு வழங்கி கெளரவித்தார். விருதை வழங்கிய நாராயணமூர்ததி, விழா மேடையில் திடீரென ரத்தன் டாடாவின் கால்களில் விழுந்து வணங்கினார். இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத ரத்தன் டாடா அவரது கையைப் பிடித்துத் தூக்கினார்.

இதையும் படிக்க: ரத்தன் டாடா யார்? டாடா குழுமத்தை ஜேஆர்டி டாடா ஒப்படைத்த சுவாரஸ்ய நிகழ்வு!

இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் இந்த செயலைக் கண்டு பலரும் நெகிழ்ச்சியடைந்தனர். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில்தான் ஒருவர் எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும் பணிவு, மரியாதை, அன்பு வாழ்வில் எப்போதும் மிகப்பெரிய இடத்தில் வைக்கும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் ரத்தன் டாடா என்று நாடே அவரைக் கொண்டாடி வருகிறது.

ரத்தன் டாடா பகிர்ந்த தகவல்..

வாழ்நாள் சாதனையாளர் விருது எனக்கு அளித்ததில் மகிழ்ச்சி. இந்த விருதைச் சிறந்த நண்பர் நாராயண மூர்த்தியின் கைகளில் பெற்றுக்கொண்டது மிகப்பெரிய மரியாதை. நான் உண்மையிலேயே பணிவன்புடன் ஏற்றுக்கொள்கிறேன் என்று இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார்.

அந்த நெகிழ்வான சம்பவத்தை இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி பகிர்ந்துள்ளார்.

ரத்தன் போன்ற ஆருயிர் நண்பரை இழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. மதிப்பு அடிப்படையிலான தலைமைத்துவத்தில் ரத்தன் எனக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தார் என்று நாராயண மூர்த்தி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related posts

ஒடிசா: வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை-மகள் பாம்பு கடித்து பலி

டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஆர்வம் காட்டும் ஸ்ரேயாஸ் ஐயர்!

வயநாடு, 24 பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது பாஜக