ஆவடி – சென்னை சென்ட்ரலுக்கு நவ.6 முதல் புதிய மின்சார ரயில்

ஆவடி – சென்னை சென்ட்ரலுக்கு நவ.6 முதல் புதிய மின்சார ரயில்

சென்னை : ஆவடி- சென்னை சென்ட்ரலுக்கு புதிய மின்சார ரயில் வரும் 6-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுதவிர, சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே இயக்கப்படும் மெமு ரயிலின் பெட்டிகள் அதிகரிக்கப்படவுள்ளது.

சென்னையில் பொது போக்குவரத்து வசதிகளில் புறநகர் மின்சார ரயில் சேவை முக்கியமானதாக உள்ளது. இதில் தினசரி 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். இந்த ரயில்களின் சேவையை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு புதிய மின்சார ரயில் வரும் 6-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ரயில் ஆவடியில் இருந்து நவ.6-ம் தேதி மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு, அன்று மாலை 6.55 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே இருமார்க்கமாகவும் 9 பெட்டிகள் கொண்ட மெமு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் 12 பெட்டிகளாக அதிகரிக்கப்பட உள்ளது. வரும் 6-ம் தேதி முதல் இருமார்க்கமாகவும் 12 பெட்டிகளாக அதிகரித்து இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே மெமு ரயில் அரக்கோணம் வழியாக இயக்கப்படுகிறது. மறுமார்க்காக, இந்த ரயில் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு அரக்கோணம் வழியாக சென்னை கடற்கரைக்கு இயக்கப்படுகிறது.

இந்நிலையில்,திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு, கடற்கரை வந்தடையும் மெமு ரயில், தாம்பரம் வரை நீட்டிப்பு செய்யப்படவுள்ளது. இந்த நீட்டிப்பு வரும் 7-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

பா.ஜ.க. முன்னாள் தலைவர் அத்வானிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

அமரன் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு