ஆவடி-திருவள்ளூர் சாலையில் பாதுகாப்பின்றி எரிவாயு இரும்புக் குழாய்கள் பதிக்கும் பணி: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஆவடி சிடிஹெச் சாலை பகுதியில் கடந்த ஓராண்டாக தனியார் எரிவாயு நிறுவனம் சார்பில் பாதுகாப்பின்றி ராட்சத இரும்புக் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

திருவள்ளூர் அருகே நயப்பாக்கம் பகுதியில் இருந்து புதுச்சத்திரம், திருநின்றவூர், பட்டாபிராம், ஆவடி, திருமுல்லைவாயல் வழியாக அம்பத்தூர் வரை 32 கி.மீ. தொலைவு கடந்த ஓராண்டாக தனியார் எரிவாயு நிறுவனம் சார்பில் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்குவதற்காக சிடிஹெச் சாலை பகுதியில் ராட்சத இரும்புக் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது ஆவடி, திருமுல்லைவாயல், அம்பத்தூர் ஆகிய பகுதிகளிலுள்ள சிடிஹெச் சாலையில் எரிவாயு ராட்சத குழாய்கள் புதைக்கும் பணிகளில் முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதில்லை என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தனியார் எரிவாயு நிறுவனம் சார்பில் சிடிஹெச் சாலையில் இரவு நேரங்களில் சாலைகளில் ஆங்காங்கே ராட்சதப் பள்ளங்களை இயந்திரங்கள் மூலம் தோண்டி, 1.5 மீட்டர் ஆழத்திற்கு இரும்புக் குழாய்கள் பதிக்கப்படுகிறது. இப்பணிகளுக்காக சாலையில் தோண்டப்படும் பள்ளங்களில் முறையாக தடுப்புகள் அமைக்கப்படவில்லை. பெயரளவிற்கு தரமற்ற இரும்புத் தடுப்புகளை அமைத்து விட்டு செல்கின்றனர்.

இதனால் இரவு நேரங்களில் சிடிஹெச் சாலையில் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் போதிய மின்விளக்கு வெளிச்சம் இன்றி தடுப்புகளின் மீது மோதி பள்ளங்களில் விழுந்து காயமடைகின்றனர். மட்டுமல்லாமல் ராட்சத இரும்புக் குழாய்களை சாலை ஓரங்களில் முறையான தடுப்புகளின்றி அடுக்கி வைத்துள்ளனர். மேலும் இரவு நேரங்களில் இரும்பு குழாய்கள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் மோதி விபத்துகளில் சிக்குகின்றனர்.

தற்போது இரவு நேரங்களில் மழை பெய்து வரும் நிலையில், தோண்டிய பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதிலும் முறையாக தடுப்புகள் வைக்காததால் பாதசாரிகள் பள்ளங்களில் விழும் நிலை உள்ளது.

இரும்புக் குழாய்கள், இயந்திரங்கள், பள்ளங்கள் இருக்கும் பகுதிகளில் அறிவிப்பு பலகைகள், ஒளிரும் மின் விளக்குகள், தரமான இரும்புத் தடுப்புகள் அமைக்க வேண்டும். அப்படி செய்தால்தான் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சாலையைப் பாதுகாப்பாக கடக்க முடியும்.

குழாய் பதிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை நெடுஞ்சாலை துறை, வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் கவனிக்காததால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தினமும் அவதிப்பட்டு செல்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட தனியார் எரிவாயு நிறுவன அதிகாரிகள் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சிடிஹெச் சாலைகளில் செய்ய வேண்டும் என்றனர்.

இது குறித்து தனியார் எரிவாயு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியது:

எரிவாயு குழாய் பதிக்கும் இடங்களில் போதிய தடுப்புகள் அமைத்துள்ளோம். மேலும் கூடுதலாக தடுப்பு அமைக்க நடவடிக்கைகளை எடுக்கிறோம். தேவையான அனைத்து பாதுகாப்புகளையும் செய்வோம். சாலையில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் இயந்திரங்கள் மூலம் தோண்டுகிறோம். இப்பணிகள்

இன்னும் 3 மாதங்களில் முடிந்து விடும் என்றார். நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியது:

சாலையில் தோண்டிய பள்ளங்களை சிமென்ட் கலவை போட்டு மூடுமாறு அறியுறுத்தி உள்ளோம். சாலையோரத்தில் குழாய்களை பதிக்கவும், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும், மழை காலம் தொடங்கவுள்ள நிலையில் விரைந்து பணிகளை முடிக்கவும் அறிவுறுத்திவுள்ளோம் என்றார்.

Related posts

பிரதமர் மோடி நம்பிக்கையை இழந்துவிட்டார்: ஜம்மு- காஷ்மீரில் ராகுல் பேச்சு!

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறந்த பந்துவீச்சாளர்: ஸ்டீவ் ஸ்மித்

நியூசிலாந்து டெஸ்ட்: இலங்கை அசத்தல் வெற்றி!