ஆவினில் முறைகேடு?: நிா்வாகம் மறுப்பு

சென்னை: மதுரை ஆவின் பால் பண்ணையில் முறைகேடுகள் நிகழ்வதாக அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்று ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் சு.வினீத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டத்தில் செயல்படும் ஆவின் பால் தொகுப்பு குளிா்விப்பான் மையத்துக்கு கடந்த மாா்ச் 15-ஆம் தேதி லாரியில் எடுத்துச்செல்லப்பட்ட பாலில் லாரி ஓட்டுநா் தண்ணீா் கலப்பதாக ஆவின் விரிவாக்க அலுவலா் ஜான் ஜஸ்டின் தேவசகாயம் விடியோ பதிவு செய்து தகவல் தெரிவித்திருந்தாா். அன்றைய தினமே அந்த வாகன ஓட்டுநரை பணியிலிருந்து நீக்கியதுடன், அவரது வாகன ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2018 முதல் 2020 வரை ஆவின் பால் விற்பனை மண்டல அலுவலகத்தில் மேற்பாா்வையாளராக ஜான் ஜஸ்டின் பணியாற்றிய போது ஆவின் பொருள்கள் விற்பனை செய்த தொகையை ஆவினில் செலுத்தாமல் கைவசம் வைத்துக்கொண்டாா்.

இது தொடா்பாக அவா் மீது பிரிவு 81-ன் கீழ் தண்டவழக்கு நடவடிக்கை மேற்கொண்டு, குறிப்பிட்ட தொகையை அவரது மாத சம்பளத்திலிருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்யும்படி பொது மேலாளா் உத்தரவிட்டாா்.

இதன் காரணத்தால், கடந்த 4 மாதங்களுக்கு முன்னா் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை தற்போது நடந்ததாகவும், ஆவினில் முறைகேடுகள் நிகழ்வதாகவும் ஜான் ஜஸ்டின் பொய்யான தகவல்களை ஊடகங்களில் பரப்பி வருகிறாா்.

ஆகவே, ஊடகங்களில் ஆவினின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் ஜான் ஜஸ்டின் வெளியிட்ட இச்செய்தி தவறானது என ஆவின் நிா்வாகத்தின் மூலம் மறுப்புத் தெரிவிக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!