ஆஸி.யின் ஆதிக்கத்துக்கு கட்டுப்பட்ட இந்திய மகளிரணி!

ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய மகளிரணி போராடி தோல்வியைத் தழுவியது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜாவில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டாஹ்லியா மெக்ராத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, கிரேஸ் ஹாரிஸ்- பெத் மூனி இருவரும் களமிறங்கினர். விக்கெட் கீப்பர் பெத் மூனி ரேணுகா சிங் பந்துவீச்சில் 2 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஜோர்ஜியா டக் அவுட் ஆக, டாஹ்லியா மெக்ராத் மற்றும் கிரேஸ் இருவரும் அதிரடியாக ரன்குவிப்பில் ஈடுபட்டனர். டாஹ்லியா மெக்ராத், எலிஸ் பெர்ரி இருவரும் தலா 32 ரன்னில் ஆட்டமிழந்தனர். கிரேஸ் ஹாரிஸ் 40 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.

ஒருகட்டத்தில் 15 ஓவர்களில் 101 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடி கடைசி 5 ஓவர்களில் 50 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளில் 151 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங், தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அதன் பின்னர் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா 12 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

ஷபாலி வர்மா 2 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் 20 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற ஜெமிமா 16 ரன்னிலும், தீப்தி சர்மா 29 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். ரிச்சா 1 ரன்னிலும், அருந்ததி 0 ரன்னிலும், ஸ்ரேயங்கா பாட்டீல் 0 ரன்னிலும் ரன் அவுட் ஆகி இந்திய ரசிகளுக்கு ஏமாற்றம் அளித்தனர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் மளமளவென சரிய மற்றொரு புறம் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் மட்டும் 54* ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அவரால் வெற்றி இலக்கை எட்ட இயலவில்லை.

இந்திய அணியால் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 20 ஓவர்களில் 142 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.

சதர்லண்ட், மாலினியக்ஸ் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

உலகக் கோப்பையில் 6 முறை சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணி இந்தத் தொடரில் வென்ற 4-வது வெற்றி இதுவாகும். மேலும் டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி தொடச்சியாக பெற்ற 15-வது வெற்றியாக இதுவாக பதிவானது.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு ஏற்கனவே மங்கிவிட்டது. நாளை(அக்.14) நடைபெறும் நியூசிலாந்து – பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் வென்றால் இந்திய அணி அரையிறுதிக்குச் செல்ல வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது