ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி! இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது தெ.ஆ.!

தென்னாப்பிரிக்க அணியிடம் ஆஸ்திரேலிய மகளிரணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

2024 ஆம் ஆண்டு மகளிருக்கான 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபை மற்றும் ஷார்ஜாவில் நடந்து வருகிறது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை, வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகள் போட்டியில் இருந்து வெளியேறின.

ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது அரையிறுதிப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை மைதானத்தில் இன்று(அக்.17) நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் லாரா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிரேஸ் ஹாரிஸ் – பெத் மூனி களம் புகுந்தனர்.

தொடக்கத்திலேயே கிரேஸ் ஹாரிஸ் 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க விக்கெட் கீப்பர் பெத் மூனி 2 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்து வெளியேறினார். மூனி தவிர்த்து மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

கேப்டன் டாஹ்லியா மெக்ராத் 27 ரன்களிலும், ஜார்ஜியா வேர்ஹாம் 5 ரன்களிலும், ஆஸ்திரேலிய நட்சத்திர வீராங்கனை எல்லிஸ் பெர்ரி 31 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது.

தென்னாப்பிரிக்க அணித் தரப்பில் அயபோங்க காக்கா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தென்னாப்பிரிக்க அணி வெற்றி

பின்னர் 20 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் டாஸ்மின் பிரிட்ஸ் 15 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

அவருக்குப் பின்னர் வந்த கேப்டன் லாரா வோல்வார்ட் – ஆனேக் போஷ் இருவரும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இரண்டாவது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த இணை பிரிந்தது. லாரா 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதிகபட்சமாக ஆனேக் போஷ் 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் 74* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

அசத்தலாக விளையாடி தென்னாப்பிரிக்க அணி 17.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 135 ரன்கள் சேர்த்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்க அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி

கடந்த காலங்களில் 10 போட்டிகளில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து ஆஸ்திரேலிய அணி 9-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு தென்னாப்பிரிக்க அணி அதிர்ச்சியளித்துள்ளது.

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி இதுவரை 1999, 2000, 2007, 2022(டி20 உலகக்கோப்பை), 2023(டி20 உலகக்கோப்பை), 2023 ஆண்டு போட்டிகளில் நடந்த வெளியேற்றுதல் சுற்றில் தென்னாப்பிரிக்க அணியை தோற்கடித்திருந்த நிலையில் 2024 டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு தென்னாப்பிரிக்க அணி அதிர்ச்சியளித்துள்ளது.

மேலும் தொடர்ச்சியாக 15 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்த ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது.

Related posts

தூத்துக்குடி: கடல் அலையில் சிக்கி 2 பெண்கள் பலி!

கிருஷ்ணகிரி அருகே தீ விபத்து: தீயணைப்புத் துறை அலுவலர், அவரது தந்தை பலத்த காயம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!