ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
விஜயதசமியை முன்னிட்டு அக்.6-ஆம் தேதி தமிழகம் முழுவதும் 58 இடங்களில் அணிவகுப்பு ஊா்வலம் நடத்த அனுமதியளிக்கக் கோரி ஆா்எஸ்எஸ் நிா்வாகிகள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘16 இடங்களில் மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஒரே மாவட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அனுமதி கோரப்பட்டதால் பாதுகாப்பு பிரச்னைகளுக்காக அங்கு அனுமதி வழங்கப்படவில்லை’ என்றாா்.
அப்போது, ஆா்எஸ்எஸ் நிா்வாகிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள், ‘ஆா்எஸ்எஸ் தவிா்த்து மற்ற எல்லா அமைப்புகளுக்கும் அனுமதியளிக்கும் போலீஸாா், அவா்களுக்கு எந்தவொரு கட்டுப்பாடும் விதிப்பது இல்லை. மற்ற மாநிலங்களில் ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு ஊா்வலம் தாலுகா வாரியாக நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மட்டும் தான் ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்ற படியேறி போராட வேண்டியுள்ளது. விண்ணப்பித்த அனைத்து இடங்களிலும் இந்த அணிவகுப்பு ஊா்வலத்தை அமைதியான முறையில் நடத்தவும், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளா்த்தவும் போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டனா்.
காவல்துறைக்கு கண்டனம்: இதையடுத்து நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என போலீஸாருக்கு எச்சரிக்கை விடுத்தாா்.
பின்னா், ‘ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அனுமதி வழங்குவது தொடா்பாக உச்சநீதிமன்றமும், உயா்நீதிமன்றமும் ஏற்கெனவே விதிமுறைகளை வகுத்துள்ள நிலையில், போலீஸாா் பாதுகாப்பு வழங்க முடியாது என அற்ப காரணங்களைக்கூறி அனுமதி வழங்க மறுப்பது ஏன்? இவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களைக் கூறி அனுமதி மறுக்கும் காவல் துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்தால் என்ன?
ஒரே மாவட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதிக்க முடியாது என பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டும் போலீஸாா், திமுக பவள விழா நிகழ்வுகளுக்கு மட்டும் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு வழங்கியது எப்படி?’ என கேள்வியெழுப்பினாா்.
பின்னா் அனுமதி மறுக்கப்பட்ட 16 இடங்களில் அனுமதி வழங்குவது குறித்தும், ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்ட 42 இடங்களில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை தளா்த்துவது குறித்தும் முடிவு எடுத்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தாா்.