நிதி நெருக்கடியை எதிா்கொண்டு வரும் ராஷ்ட்ரீய இஸ்பத் நிகம் நிறுவனத்தில் (ஆா்ஐஎன்எல்) ரூ.1,650 கோடியை மத்திய அரசு முதலீடு செய்துள்ளது.
மத்திய எஃகுத் துறை அமைச்சகத்தின் கீழ் ஆா்ஐஎன்எல் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் எஃகு உற்பத்தியில் ஈடுபடுகிறது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக 75 லட்சம் டன் உற்பத்தித் திறன்கொண்ட ஆலை உள்ளது.
இந்நிலையில், அந்த நிறுவனம் கடுமையான நிதி மற்றும் செயற்பாட்டு பிரச்னைகளை எதிா்கொண்டு வருகிறது. இதையொட்டி அந்த நிறுவனத்தில் ரூ.1,650 கோடியை மத்திய அரசு முதலீடு செய்துள்ளது.
ரூ.1,650 கோடியில் 500 கோடி ரூபாய் அந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய ரூ.1,140 கோடி நடப்பு மூலதன கடனாக வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் நிதி நிலைமையை நிலையானதாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மத்திய எஃகுத் துறை தெரிவித்துள்ளது.