இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் தோல்வியடைய காரணம் இதுதான் – இலங்கை கேப்டன் வருத்தம்

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை தோல்வியடைந்தது.

மான்செஸ்டர்,

இங்கிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இலங்கை 236 ரன்களும், இங்கிலாந்து 358 ரன்களும் எடுத்தன. இதனையடுத்து 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 89.3 ஓவர்களில் 326 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 113 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் அடித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜோ ரூட் 62 ரன்கள் அடித்தார்.

இந்நிலையில் 2வது இன்னிங்ஸ்போல முதல் இன்னிங்சிலும் விளையாடியிருந்தால் இங்கிலாந்தை வீழ்த்தியிருப்போம் என்று இலங்கை கேப்டன் தனஞ்செயா வருத்தம் தெரிவித்துள்ளார். இருப்பினும் தவறுகளை திருத்திக் கொண்டு தவறிய வெற்றியை 2-வது போட்டியில் பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"முதல் இன்னிங்சை விட 2வது இன்னிங்சில் எங்களின் பேட்டிங், பவுலிங் நன்றாக இருந்தது. ஒட்டுமொத்தமாக நாங்கள் நன்றாக செயல்படவில்லை. நாங்கள் சரியான இடத்தில் பந்துகளை போடவில்லை. பீல்டிங்கிலும் எங்களின் வாய்ப்புகளை எடுக்கவில்லை. இருப்பினும் இங்கிலாந்து போன்ற கட்டுப்பாடான பவுலிங் வரிசைக்கு எதிராக இந்த சூழ்நிலைகளில் ரன்கள் அடிப்பதற்கான வழியை எங்களுடைய பேட்டிங் வரிசை கண்டறியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. கமிந்து மெண்டிஸ் நன்றாக பேட்டிங் செய்தார். அவருக்கு மற்ற அனைவரும் ஆதரவு கொடுத்திருக்க வேண்டும். அடுத்த போட்டியில் எங்களின் திட்டங்களை தொடர்ந்து பின்பற்றி அதை சிறப்பாக செயல்படுத்துவோம்" என்று கூறினார்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா