அருணாசல பிரதேசத்தை சேர்ந்த இசைக் கலைஞர் கோன்யோ வய் சோனம் (கோன் வய் சன்) கோழியைக் கொன்று ரத்தத்தைக் குடித்ததற்காக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
அக்.27ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து பீட்டா அமைப்பினர் இட்டாநகர் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
நாட்டுப்புறப் பாடல் எழுத்தாளர், இசையமைப்பாளர் என பன்முக திறமைசாலியாக அறியப்படுகிறார் கோன்யோ வய் சோனம் யூடியூப்பில் பிரபலமானவராக அறியப்படுகிறார். சட்டப் பிரிவு 325 /11இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிஎஸ்பி ரோஹித் ராஜ்பிர் சிங், “கோன் சன் விரைவில் விசாரணையில் கலந்துகொள்வார்” எனக் கூறியுள்ளார்.
அந்தப் பகுதியில் இந்த சம்பவம் பேசுபொருளானதைத் தொடர்ந்து அவர் மன்னிப்பும் கேட்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். அதற்காக இன்ஸ்டாகிராமில் மன்னிப்பு கடிதமும் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியை நடத்தியவர்கள், “எந்த விலங்கும் துன்புறுத்தப்படவில்லை. நேரடியாக எந்த விலங்கும் கொல்லப்படவுமில்லை” எனக் கூறியுள்ளார்கள்.
இது குறித்து பீட்டா அமைப்பினர் கூறியதாவது:
மக்களிடம் அதிர்ச்சியை உண்டாக்க விரும்பி மிருகங்களைத் துன்புறுத்துவது மிகவும் தவறான செயல். அதற்கு வேறு வேலையை பார்த்துக் கொள்ளலாம். உண்மையான கலைஞர்கள் அவர்களது திறமையை மட்டுமே நம்புவார்கள்.
எந்த வகையிலும் விலங்குகளை துன்புறுத்துவது ஏற்கத்தக்கதல்ல. விலங்கினை துன்புறுத்துபவர்கள் விரைவில் மனிதர்களையும் துன்புறுத்துவார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன.
3 முறைக்கு மேல் விலங்குகளை துன்புறுத்துபவர்கள் கொலை, கொள்ளை, மிரட்டல், துன்புறுத்தல், போதை பழக்க மோசடிகளில் ஈடுபடுவதாக தடயவியல் ஆராய்ச்சி, குற்றவியல் சர்வதேச இதழில் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்கள்.