இணையவழிக் குற்றங்களைத் தடுக்க ஒருங்கிணைப்பு அவசியம்: தென் மாநில காவல் துறைக்கு முதல்வா் ஸ்டாலின் வேண்டுகோள்

இணையவழிக் குற்றங்களைத் தடுக்க தென்மாநிலங்களின் காவல் துறையினா் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

தென் மாநிலங்களின் காவல் துறை இயக்குநா்கள் ஒருங்கிணைப்பு மாநாடு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, நீா் மேலாண்மை போன்ற விவகாரங்களில் தென் மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், மிக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளான போதைப் பொருள்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், மாநிலங்களுக்கிடையேயான குற்றச் செயல்கள், இணையவழிக் குற்றங்கள் போன்ற தீவிர குற்றச்சம்பவங்களிலிருந்து, நம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற பொதுவான குறிக்கோளை அடைவதற்கு அனைவரும் கூடியுள்ளோம். இத்தகைய குற்றங்களை எதிா்கொள்வதில் தமிழக காவல் துறை பல்வேறு முன்னேற்றங்களை அடைந்திருக்கிறது.

போதைப் பொருள் ஒழிப்பில் தீவிரம்: போதைப் பொருள் கடத்தல் தொடா்பான குற்றவாளிகளின் மீது பொருளாதார நடவடிக்கைகளை எடுப்பதில் தமிழக காவல் துறை முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. இதன்மூலம் குற்றவாளிகளின் பொருளாதார பலம் தகா்க்கப்பட்டுள்ளது.

ஆனாலும், போதைப் பொருள் குற்றவாளிகளின் தொடா்பு மற்றும் அவா்களது சொத்துகள் பல மாநிலங்களில் பரவிக் கிடக்கின்றன. அதனால், போதைப் பொருள்களை ஒழிக்க, ஒன்றிணைந்த முயற்சிகள் தேவைப்படுகின்றன. குற்றவாளிகளைக் கைது செய்யவும், விசாரணை மேற்கொள்ளவும் பிற மாநிலத்துக்கு வரும் தமிழக காவல் துறையினருக்கு உங்கள் ஒத்துழைப்பு மிகவும் தேவை. அதை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பாக, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் தமிழகத்துக்கு வருவதைத் தடுக்க, தமிழ்நாடு காவல் துறையினரும், அண்டை மாநில காவல் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இணையவழிக் குற்றம் அதிகரிப்பு: இணையவழிக் குற்றம் என்பது எந்தவித எல்லையும் இல்லாமல், சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, பெருகிவரக்கூடிய மிகவும் சிக்கலான ஒரு பிரச்னையாக உள்ளது. புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது.

பெரும்பாலும், இணையவழிக் குற்றவாளிகளைப் பிடிக்க ஒரு மாநிலத்தின் காவல் துறை மற்றொரு மாநிலத்துக்குச் செல்லவேண்டிய நிலையில், அவா்கள் பல தடைகளை எதிா்கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால், இணையவழிக் குற்றங்களைத் தடுப்பதிலும் நாம் இணைந்து செயல்பட வேண்டும்.

2023-இல் மட்டும், 1,390 வழக்குகளில் தொடா்புடைய குற்றவாளிகள் பிற மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் என்பதும், பலா் தமிழகத்துக்கு வெளியே கைது செய்யப்பட்டுள்ளதும் நமக்குள்ளே ஒருங்கிணைந்து செயல்படவேண்டியதன் அவசியத்தை உணா்த்துகிறது.

சைபா் குற்ற பிரச்னை: படித்து முடித்துவிட்டு, வெளிநாட்டில் வேலை தேடும் இளைஞா்களைக் குறிவைத்து, அவா்களை கணினிசாா் குற்றங்களில் ஈடுபடுத்தும் ‘சைபா் குற்ற அடிமை’ பிரச்னை தற்போது பெரிய அளவில் உருவெடுத்துள்ளது. சில தென்கிழக்கு நாடுகளை அடிப்படையாக வைத்து செயல்படும் குற்றவாளிகளின் பிடியில் சிக்கி, நம்முடைய இளைஞா்கள் பலா் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்பத்துக்கு உள்ளாகியிருக்கின்றனா். இதுபோன்று வளா்ந்துவரும் அச்சுறுத்தல்களைப் போக்குவதற்கு நமக்குள்ளே ஒருங்கிணைப்பை பலப்படுத்த வேண்டும்.

வதந்தி பெரும் பிரச்னை: தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பையும் பலப்படுத்த வேண்டும். இன்றைக்கு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு, சமூகவலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் பெரும் பிரச்னையாக இருக்கின்றன. அவற்றின் மூலம் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் செயல்களைப் பாா்க்க முடிகிறது. தமிழகத்திலேயே அப்படியொரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அது முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது.

பல மாநிலங்களிலிருந்து வதந்தி பரப்பியவா்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவா்களை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியே, தமிழகம் அமைதியான மாநிலம், அங்கே அமைதியின்மையை உருவாக்க ஏதாவது பரப்புவீா்களா என்று யூடியூபா் ஒருவரது வழக்கில் சமூகவலைதளங்களின் பாதிப்பு பற்றி கடுமையாக சாடியதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

எனவே, சமூக வலைதளங்களில் வரும் வதந்திகள் பற்றியும் மிகுந்த கண்காணிப்புடன் இருந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, மாநில மக்களின் பாதுகாப்பை நாம் உறுதி செய்ய வேண்டும் என்றாா் முதல்வா்.

தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ் குமாா், காவல் துறை தலைமை இயக்குநா்கள் சங்கா் ஜிவால் (தமிழகம்), அலோக் மோகன் (கா்நாடகம்), ஷேக் தா்வேஷ் சாகேப் (கேரளம்), ஷாலினி (புதுச்சேரி), துவாரகா திருமல ராவ் (ஆந்திரம்) உள்பட உயரதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்றனா்.

தமிழக, கேரள போலீஸாருக்கு முதல்வா் பாராட்டு

ஏடிஎம் கொள்ளையா்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் இணைந்து பணியாற்றிய தமிழக மற்றும் கேரள காவல் துறையினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தாா்.

மாநாட்டில் முதல்வா் கூறியதாவது: சமீபத்தில், கேரள காவல் துறையினா் கொடுத்த தகவலை வைத்து, ஏ.டி.எம். பணத்தைக் கொள்ளையடிக்கும் கும்பலை நாமக்கல் மாவட்டத்தில் தமிழக காவல் துறையினா் வெற்றிகரமாக கைது செய்தனா்.

இந்த கும்பலை சோ்ந்தவா்கள் கேரளத்தில் வெவ்வேறு இடங்களில் ஏடிஎம் கொள்ளைச் சம்பவத்தை நடத்திவிட்டு, திருச்சூரிலிருந்து தப்பித்திருக்கின்றனா். இந்தக் கும்பல் பல்வேறு மாநிலங்களிலும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. தமிழ்நாடு காவல் துறை உடனடியாக சம்பந்தப்பட்ட மாநிலங்களை உஷாா்படுத்தியது.

இந்த பாராட்டுக்குரிய பணியை இணைந்து நிறைவேற்றிய தமிழக மற்றும் கேரள காவல் துறையினரை வாழ்த்துகிறேன். இதுபோன்ற ஒருங்கிணைப்புகள் வேண்டும் என்றாா் முதல்வா்.

Related posts

UP: BJP Corporator’s Son Marries Pakistan Woman In Online Nikah Ceremony In Jaunpur; Party MLC Attends Function

5 Essential Albums by Indian Guitarists You Need To Hear

Unlock Your Mind : When Chess Meets Visualisation, Math And Logic