வாட்ஸ் அப் வாயிலாக இணையவழி மோசடியில் ஈடுபட்டு பணம் பறித்த தமிழகம் உள்பட 3 மாநிலங்களைச் சேர்ந்த 24 பேரை ஒடிஸா குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கார்ப்பரேட் நிறுவன பணியாளர் ஒருவரை ஏமாற்றி அவரிடமிருந்து ரூ. 6.28 கோடி மோசடி செய்த வழக்கில் மேற்கண்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோசடியில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வங்கி கணக்குகளிலிருந்து ரூ. 16.85 லட்சம் தொகை முடக்கப்பட்டுள்ளதாக குற்றப்பிரிவு ஏடிஜிபி விநய்டோஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ. 6.8 லட்சம் திருப்பியளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பெரும் தொகையை இழந்த அந்த நபரிடம் முதலில் ஆசை வார்த்தை கூறி, வாட்ஸ் அப் தளத்தில் செயல்பட்டு வரும் ஒரு மோசடி குழுவில் உறுப்பினராக மோசடி நபர்கள் சேர்த்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, சிறு தொகை முதலீடு செய்தால் அதிக லாபத்துடன் பணம் திருப்பி கிடைக்குமென அந்த நபரை நம்ப வைத்துள்ளனர். அதை நம்பி அந்த நபரும் பணத்தை சிறுகச்சிறுக மோசடியாளர்களுக்கு பரிவர்த்தனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மோசடி வழக்கு விசாரணைக்காக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணையில், இந்த மோசடி வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த 9 பேருக்கும், குஜராத்தைச் சேர்ந்த 8 பேருக்கும், ராஜஸ்தானைச் சேர்ந்த 7 பேருக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்த நிலையில், அவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.