’இந்தியா’வின் நம்பிக்கை நட்சத்திரம் – ராகுல் காந்தி பிறந்தநாள்

Rahul Gandhi’s Birthday 2024: ’இந்தியா’வின் நம்பிக்கை நட்சத்திரம்… ராகுல் காந்தியின் பிறந்தநாள் இன்று!

ராகுல் காந்தி

பாஜகவுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட இந்தியா கூட்டணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமாகவும் இருக்கும் ராகுல் காந்தி இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப் பேரனாகவும், இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் பேரனாகவும், இந்தியாவின் ஹைடெக் பிரதமர் ராஜீவ் காந்தியும் மகனாகவும் கடந்த 1970ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி டெல்லியில் உள்ள ஹோலி பேமிலி மருத்துவமனையில் பிறந்தவர் ராகுல் காந்தி. 5ஆம் வகுப்பு வரை டெல்லியில் உள்ள செயிண்ட் கொலம்பா பள்ளியில் படித்த ராகுல் காந்தி, அதன்பின்னர் டேராடூனில் உள்ள தி டூன் பள்ளிப் படிப்பை தொடர்ந்தார்.

விளம்பரம்

இந்த நேரத்தில் அவரது தந்தை ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால், பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்குள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கீழ் இயங்கும் புளோரிடா ரோலின்ஸ் கல்லூரியில் இளங்கலை உளவியல் படிப்பை முடித்த ராகுல் காந்தி, அங்கேயே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிடாட் கல்லூரியில் முதுகலை முடித்தார். அதன்பின்னர், எம்.பில். ஆய்வுப் படிப்பை நிறைவு செய்தார்.

பின்னர் அமெரிக்காவின் மைக்கேல் போர்டேர்ஸ் நிர்வாக ஆலோசனைக் குழுவில் 3 ஆண்டுகள் பணியாற்றிய ராகுல் காந்தி, 2002ஆம் ஆண்டு நாடு திரும்பிய பிறகு, மும்பையில் சொந்தமாக நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.

விளம்பரம்

அரசியல் வாழ்க்கை

பின்னர், 2003 முதல் தனது தாயாருடன் அரசியல் மேடைகளில் பங்கேற்று வந்த ராகுல், 2004ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

ஆரம்ப கால அரசியல் வாழ்க்கை அவருக்கு பெரும்பாலும் சாதகமாக அமையவில்லை. அரசியல் அனுபவமற்றவர், உண்மையான களநிலவரத்தை அறியாதவர், வாரிசு அரசியல் மூலம் வந்தவர் என்ற விமர்சனங்களை அவர் எதிர்கொண்டார். துடிப்பானவராக இருந்த ராகுல் காந்தி, கோபத்தை அப்படியே கொட்டிவிடும் குணம் கொண்டவராகவும் இருந்ததால், அவரால் தொண்டர்கள் மத்தியில் எளிதில் சென்றடைய முடியவில்லை.

விளம்பரம்

பின்னர், மெல்ல மெல்ல தன்னை செதுக்கிக் கொண்ட ராகுல் காந்தி, 2007ஆம் ஆண்டில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் தலைவராக பொறுப்பேற்றார். பின்னர் 2009ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தல் அவரது வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது அடித்தட்டு மக்களை எளிய முறையில் அணுகி, அவர்களது வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளத் தொடங்கினார். அந்த தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றிபெற்றதற்கு, ராகுல் காந்தியின் பிரச்சாரமும் முக்கியப் பங்கு வகித்தது. ஆனாலும், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் இருந்த குறைபாடுகளை ராகுல் காந்தி பகிரங்கமாக விமர்சித்தார்.

விளம்பரம்

இதனிடையே, அவரது சிறப்பான செயல்பாடுகளால், கட்சியினரின் ஏகோபித்த ஆதரவுடன் 2013 முதல் 2016 வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அது அவருக்கு நீண்டகால மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. 2014ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. அப்போது இருந்த மோடி அலை, காங்கிரஸ் கட்சியை காணாமல் செய்யும் அளவுக்கு இருந்தது. இதனால், ராகுல் காந்தி கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

இருப்பினும், அடுத்து வரும் பொதுத்தேர்தலை சந்திக்கும் வகையில், 2017ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் தலைமையில் தேர்தலை எதிர்கொண்டபோதும் நீண்ட பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சியால் எழுந்து வரமுடியவில்லை. அந்த தேர்தலில் முதன்முறையாக கேரளாவின் வயநாடு தொகுதியிலும், உத்தரபிரதேசத்தில் ஏற்கெனவே வெற்றிபெற்ற அமேதியிலும் போட்டியிட்டார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமிக்க அமேதி தொகுதியிலேயே வீழ்த்தப்பட்ட ராகுல் காந்தி, அந்த தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத அளவுக்கு படுதோல்வியை சந்தித்தார். அந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி, அன்று முதல் சாதாரண தொண்டராகவே கட்சிப் பணியைத் தொடர்ந்து வருகிறார்.

விளம்பரம்

பாரத் ஜோடோ யாத்திரை

அடுத்தடுத்து கிடைத்த தோல்விகள் அவரை மேலும் மெருகூட்டின. இதனால், கட்சியைத் தொடர்ந்து பலப்படுத்தும் வேலைகளில் தீவிரம் காட்டிய ராகுல் காந்தி, கடந்த 2022 முதல் 2023 வரை கன்னியாகுமரியில் தொடங்கி, காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் என்ற பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டார். நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று, இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகள் போன்றவர்களை நேரடியாக சந்தித்து, அவர்களது அன்றாட பிரச்சனைகளை கேட்டறிந்து, களநிலவரத்தை தெரிந்து கொண்டார். இதனால், அவருக்கு வழியெங்கிலும் தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது ராகுல் காந்திக்கு புதிய நம்பிக்கையையும் தெம்பையும் கொடுத்தது. அதன்பின்னர், கடந்த 2024 ஜனவரி முதல் மார்ச் வரை மணிப்பூர் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மேற்கொண்டார் ராகுல் காந்தி.

விளம்பரம்

இதையும் படிங்க:
பள்ளிகளில் நெற்றியில் திலகம், கையில் கயிறுக்கு தடை : அரசுக்கு நீதிபதி சந்துரு குழு பரிந்துரை

இதைத் தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டிருந்தாலும், பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படவில்லை. ஆனால், அந்த கூட்டணியின் ஒட்டுமொத்த நம்பிக்கையாகவும், கூட்டணியின் முகமாகவும் ராகுல் காந்தி தான் இருந்தார். நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு, மக்களின் வலிகள் மற்றும் வேதனையை அறிந்து, அதற்கு தீர்வு காண முயற்சிகளை மேற்கொண்ட ராகுல் காந்திக்கு ரேபரேலி மற்றும் வயநாடு என இரு தொகுதி மக்களும் வெற்றியை பரிசாக கொடுத்தனர்.

இதன்மூலம், காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நம்பிக்கையாக ராகுல் காந்தியே மீண்டும் வலம் வரத் தொடங்கியுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Rahul Gandhi

Related posts

லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுத்து விட்டோம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு தரத்தில் சமரசம் கிடையாது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: பா.ஜ.க. – சந்திரபாபு நாயுடு கூட்டணியில் உரசலா..?