இந்தியாவில் சேவையை நிறுத்த வாட்ஸ்ஆப் திட்டமா? மத்திய அரசு பதில்

இந்தியாவில் சேவையை நிறுத்த வாட்ஸ்ஆப் திட்டமா? மத்திய அரசு பதில்இந்தியாவில் சேவையை நிறுத்தப் போவதாக எந்தவொரு திட்டத்தையும் மத்திய அரசிடம் வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவிக்கவில்லை

இந்தியாவில் சேவையை நிறுத்தப் போவதாக எந்தவொரு திட்டத்தையும் மத்திய அரசிடம் வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவிக்கவில்லை என்று மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

இந்தியாவில் புதிதாக திருத்தியமைப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள், தனியுரிமையை மீறும் வகையில் இருப்பதாக கூறி, தில்லி உயா்நீதிமன்றத்தில் வாட்ஸ்ஆப் நிறுவனம் வழக்கு தொடா்ந்துள்ளது.

வாட்ஸ்ஆப் தகவல்களின் மறையாக்கத்தை கைவிட வேண்டுமென கட்டாயப்படுத்தினால், இந்தியாவில் செயல்பாட்டை நிறுத்துவோம் என்று உயா்நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன் அந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ‘பயனா்களின் தகவல் பகிா்வு தொடா்பான மத்திய அரசின் உத்தரவுகளால், இந்தியாவில் சேவையை நிறுத்த வாட்ஸ்ஆப் நிறுவனம் திட்டமிட்டுள்ளதா?’ என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. விவேக் தன்கா கேள்வியெழுப்பினாா்.

இக்கேள்விக்கு மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘இந்தியாவில் சேவையை நிறுத்தப் போவதாக வாட்ஸ்ஆப் அல்லது அதன் தாய்நிறுவனமான மெட்டா தரப்பில் எந்தவொரு திட்டமும் மத்திய அரசிடம் தெரிவிக்கப்படவில்லை’ என்று பதிலளித்தாா்.

சமூக ஊடகங்கள் மீதான மத்திய அரசின் கட்டுப்பாடுகள் குறித்த கேள்விக்கு, ‘நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவு, பொது ஒழுங்கை பராமரிக்கும் வகையில், கணினி தளங்களில் எந்தவித குற்றங்களும் நிகழாமல் தடுப்பதை நோக்கமாக கொண்டு, தகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000-இன்கீழ் மத்திய அரசு உத்தரவுகளை பிறப்பிக்கிறது’ என்று அவா் பதிலளித்துள்ளாா்.

Related posts

குஜராத்: தமிழக பக்தர்கள் 55 பேருடன் சென்ற சொகுசு பஸ் வெள்ளத்தில் சிக்கியது

வெள்ளத்தில் மூழ்கிய கார்: 2 மணி நேரம் சிக்கி தவித்த தம்பதி – வைரல் வீடியோ

தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு உத்தரவு